திமுகவில் கோஷ்டிப் பூசல்! அறிவாலயம் வரை வந்த பஞ்சாயத்து!

தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது கட்சித் தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில் இப்போது இரு வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிரணி சார்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனை ஓபன் மைக்கிலேயே கேள்விகணைகளால் துளைத்தெடுத்து சண்டையிட்டார் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி.

அவர் தனது ஆதங்கத்தை கொட்டியதை கூட திமுக தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ஆனால் பொதுவெளியில் மேடை போட்டு ஓபன் மைக்கிலேயே, ”மணிப்பூர் இருக்கட்டும், இங்க பெண்களுக்கு என்ன பாதுகாப்பு” என உட்கட்சி பிரச்சனையுடன் பெண்கள் பாதுகாப்பை முடிச்சு போட்டு பேசியது தான் கட்சி தலைமையை கோபம் கொள்ளச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் பின்னணியிலும், தமிழ்ச்செல்வி இவ்வாறு பேசியதன் பின்னணியிலும் ராஜா எம்.எல்.ஏ. இருப்பதாக சிவபத்மநாதன் தரப்பு சந்தேக்கிறது.

இதனிடையே இது குறித்து அனைத்து விவரங்களும் அன்பகம் கலைக்கு சென்றுவிட்டதாகவும் அவர் உரிய விசாரணை நடத்தி விரைவில் கோஷ்டிப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணி போட்டி போட்டு போராட்டம்!

மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.

வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.