பழனிசாமி: பொள்ளாச்சியில் வந்து பாருங்கள் முதல்வரே, அதிமுகவின் கூட்டம் எப்படி இருக்கிறது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியில் இருந்து அதிமுக வேட்பாளரின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம்.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக இரண்டு, மூன்றாக போய்விட்டது என்று பேசுகிறார். பொள்ளாச்சியில் வந்து பாருங்கள் முதல்வரே, அதிமுகவின் கூட்டம் எப்படி இருக்கிறது என்று. அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளமே சாட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்தார். அவரது முயற்சிகள் தவிடுபொடியானது. அதிமுகவை உடைக்க முதல்வர் எடுத்த அத்தனை அவதாரங்களும் தூள் தூளாக்கப்பட்டது.

அதிமுகவை உருவாக்கியவர் தெய்வசக்தி படைத்த எம்ஜிஆர். அதைக் கட்டிக் காத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்தப் இருபெரும் தலைவர்களும், தமிழக மக்களுக்கு கொடுத்த மிகப் பெரும் கொடை. நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்காக வாழ்ந்தார்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை உருவாக்கி, காட்டிக் காத்து நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர். நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் தேர்தல் என்ற பெயரில் எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம்.

அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்கு அதிமுக அரசு பாடுபட்டது. அதிமுகவின் 30 ஆண்டு கால உழைப்பால், தமிழகம் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.

நாங்கள் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சிறப்பான ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றி, மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது” என பழனிசாமி பேசினார்.

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்..! அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் நச்சுனு பதிலடி..!

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.

கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திமுகவினர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

பெரியாரின் சீடராக இருந்து பெரியாரின் தளபதியாக மாறிய அண்ணா “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி தொடங்கி பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.

சி.என்.அண்ணாதுரை என்ற பெயர் பின்னாளில் சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணா. 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அக்ஷா பவன் முதியோர் இல்லத்தில் கனிமொழி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜனவரி 5 -ம் தேதி திமுக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் 56 வது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடலூர் ஒன்றிய செயலாளர் அ.லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமதி தலைமையில் இன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார், மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்கள் ச.பரிமளா (கூடலூர் நகர மன்ற தலைவர்) சிவகாமி (நெல்லியாளம் நகராட்சி தலைவர்) செல்வி. வள்ளி (தேவர் சோலை பேரூராட்சி தலைவர்), கௌரி (சோலூர் பேரூராட்சி தலைவர்) வெண்ணிலா (நகர மன்ற உறுப்பினர்), மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் சித்ராதேவி (ஓவேலி பேரூராட்சி தலைவர்) மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அன்ன புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் கீர்த்தனா (ஊராட்சி ஒன்றிய தலைவர்), தனபாக்கியம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்பி கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சொன்னதை செய்த கனிமொழி..! 7ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் நெகிழ்ச்சி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27-ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

அப்போது , கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும்ம் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

மத்திய மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றன.

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  மதிமுக,  மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, முழு அளவில் பங்கேற்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1962- ல் திமுக ஆட்சி.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சி …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும்.

திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர்.

அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார். இந்த அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது.

1962-ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962-ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.

கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை…! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது..!

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், எந்த ஒரு மேற்படிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரே தகுதி தேர்வு போதும் என கருணாநிதி அறிவித்தார். இதைத்தான் தி.மு.க. அரசு இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில அரசின் பட்டியலிலேயே இருக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையற்றது.

இது மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரையும் பறித்து வருகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை. இதனை தடுக்க மத்திய அரசு தான் முன்வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.