சீமான்: அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தினர்… குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றனர்..!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது. நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும்.

“அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு. அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும்.

அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி என்று சொல்வது தான் பெரிய பித்தலாட்டம்

தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக ஸ்டாலின் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய பித்தலாட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் மு.க. ஸ்டாலின்.

இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?

தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது. அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.

திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய ஏய்ப்பு (Humbug!) ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.

மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்! இத்தனை நாட்கள் “என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?” என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்?

மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை! என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைகோ: பயமா..! திமுகவின் அகராதியிலேயே கிடையாது…!

பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை… அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.

நீட் தேர்வு விலக்கு குறித்து திமுகவின் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, நீட் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார்.

மேலும், வருமான வரித்துறை சோதனைகளுக்கு திமுக அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. திமுகவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என வைகோ தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: பாஜகவின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்..!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைத்து அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்க வேறு வழியில்லை எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட த்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்த்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் – மிரட்டல் – உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பாஜகவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை! பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

‛நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு’ என்கிற திரைப்பட பாடல் வரிகளை போல திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக் கொள்கை, கல்வி கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட மொத்தம் 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது. பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்த பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுதான் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அவை, 2026 சட்டசபை பொதுத்தேர்தலில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கழகம் மகத்தான வெற்றியை பெறுவதற்கு அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும்; திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்றெ செய்து ‛மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்த வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சார்ந்த பாராட்டும். நன்றியும்.

2021 சட்டசபை தேதர்லின்போது 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை தந்து அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

நீட் ரத்து விஷயத்தில் கபட நாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய் ஜாலத்தை மாணவ-மாணவியரும் மக்களும் இனியும் நம்பத் தயாராக இல்லை. எனவே அடுத்தவர்கள் மீது பழிபோட்டு, போகாத ஊருக்கு வழிக்காட்டுவது போல, ஏமாற்று வேலைகளை செய்யாமல் மாணவ சமுதாயத்திடமும் , அவர்தம் பெற்றோர்களிடமும் தமிழக மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

‛நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு’ என்கிற திரைப்பட பாடல் வரிகளை போல திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக் கொள்கை, கல்வி கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்க்க காரணமாக இருந்துவிட்டு, அப்போதே அதை தடுக்க தவறிவிட்டு தற்போது அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்வதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

கழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களை தாமதமாக செயல்படுத்தியும், நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கவும் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதியை பெற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி.

இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம். அதிமுக மதச்சார்பில்லாத ஒரு மக்கள் இயக்கம். ஆகவே, கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று உறுதி அளிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும், முக ஸ்டாலின் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டும், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்ற வகையில் சொத்து வரியில் தொடங்கி, குடிநீர் வரி முதல் குப்பை வரி வரை உயர்த்தி உள்ள திமுக அரசுக்கு கண்டனம். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும், கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு இச்செயற்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

அதிகார மமதையில் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்துகின்றன வகையில் ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பெண்களின் பாதுகாவலரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடிக்கு பாராட்டும், நன்றியும்.

‛அராஜகம் – வன்முறை’ என்றாலே திமுக; திமுக என்றோலே ‛அராஜகம் – வன்முறை’ என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும், கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் வன்கொடுமை என தொடர் சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு, சுய விளம்பர ஆட்சியும், போட்டோ ஷூட் காட்சியும் நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்தேறிய பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம். தீவிரவாதத்தை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கழகம் துணை நிற்கும்.

பொது எதிரியை வீழ்த்த ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவது கூட்டணி. அந்த வகையில் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு முழு மனதுடன் ஆதரவை அளித்து அங்கீகரிக்கிறது.

அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலேயே செயல்பட்டு, ஆளுமை திறன் மிக்க பொதுச்செயலாளர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை 2026ம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவோம் என சூளூரை ஏற்போம்.

தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதாவின் அரசு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. தற்போது மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்ததை இச்செயற்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் கேள்வி சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா..!

குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று, சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் , விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதுமட்டுமின்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளன. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ” ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுகவுக்கும், ‘இண்டியா’ கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி” என்று கூறி இருந்தார்.

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “ஒவ்வொரு மாநிலத்தில் இருந்த வரியையும் இணைத்து தான் GST கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே GST வந்த பிறகு தான் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பாதிப்பதாக சொல்வது தவறு. முன்பு இருந்த வரி விகிதத்தைவிட GST வந்த பிறகு வரி விகிதம் குறைந்து இருக்கிறது. அனைத்து நிதி அமைச்சர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் என்பது அதனை இன்னும் குறைக்கத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது

நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக? குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று.தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சீமான்: திமுக அரசே மீனவர்களிடம் பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அவர்களிடமே கொடு ..!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை வாழ்கின்ற மீனவ மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை உரியவர்களிடம் வழங்காமல் திமுக அரசு கால தாமதம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

மீனவச் சொந்தங்கள் காலங்காலமாக வாழ்ந்த பூர்வீக இடங்களை பறித்துவிட்டு, மாற்று குடியிருப்புகளை வழங்க திமுக அரசு மறுப்பது கொடுங்கோன்மையாகும். பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்கள் வாழ்ந்த குடிசைப்பகுதியில், அடிக்கடி தீ விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட காரணத்தால், அங்கு வாழ்ந்த 250 குடும்பங்களுக்கு முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக மீனவ மக்கள் வாழ்ந்து வரும் அக்குடியிருப்புகள் தற்போது முற்றிலும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் வாழத்தகுதியற்ற பகுதியாகிவிட்டது. இந்நிலையில் மீனவ மக்களுக்கென்று கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அம்மக்களிடம் ஒப்படைக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, அரசு ஒதுக்கிய குடியிருப்பில் கடந்த இரண்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் மீனவ மக்களின் வாரிசுகளின் குடும்பங்களுக்கு தனிக் குடியிருப்பு வழங்கவும் திமுக அரசு மறுக்கின்றது.

அதுமட்டுமின்றி, ஆளும் திமுக கட்சி பொறுப்பாளர்கள் மீனவர் வீடுகளை முறைகேடாக விற்கவும் முயல்கின்றனர். இவை குறித்து, மீனவ மக்கள் அரசிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மிகுந்த ஏமாற்றத்திற்கும், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, மாற்று குடியிருப்புகள் வழங்குவதாகக் கூறி பட்டினப்பாக்கம் பகுதியில் தொல்குடி தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீக வாழ்விடங்களை பறித்த தமிழ்நாடு அரசு, தங்களிடம் அதனை திருப்பி ஒப்படைக்குமாறும் மீனவ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடற்பரப்பிலிருந்து 500மீ தூரம் வரை மீனவ மக்கள் குடியிருப்புகள் அமைக்கவே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை தமிழ்நாடு அரசு அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமெனவும், அதுவரை மீனவ மக்களுக்காகக் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் அவர்களை குடியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டி.டி.வி. தினகரன்: திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்..!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதராமல் கிடைக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமமுக சார்பில் உழைப்பாளர் தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன், அமமுக என்றைக்கும் யாரிடமும் மண்டியிடாமல், சமரசம் செய்யாமல் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். “புலி பதுங்குவது பாய்வதற்குதான்.நான் அமைதியானவன், பொறுமையானவன் தான். அதே நேரத்தில் அழுத்தமானவன். எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் மண்டியிடாமல், இலக்கை அடையும் வரை தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன்.

தமிழகத்தை வாட்டி வதைத்துக் கொண்டுள்ள தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக வந்துள்ளது ஏற்றுக்கொள்ள மறுத்ததால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.என்று சொல்கிறார்கள். தீய சக்தி திமுகவை நோக்கம் தான் நமது தலையாய நோக்கம். அதனை நிறைவேற்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அமமுக தியாகங்கள் செய்யத் தயாராக இருந்தது. ஆனால், அதனை சிலர்.

எங்கள் கூட்டணி பலப்படுகிறது. அதிமுக மட்டுமல்ல திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதராமல் கிடைக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் தான் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்க முடியும்.

2024 மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக தேஜகூவில் இணைந்தோம். நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தெரிவித்தோம். தீயசக்தி திமுகவை வீழ்த்த கூட்டணியில் தொடர்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எங்க திமுக மோர் பந்தலை அகற்றுயா பார்க்கலாம் என தவெகவினர் கடும் வாக்குவாதம்

அனுமதியின்றி அமைத்ததாக கூறி தவெகவின் தண்ணீர் பந்தலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி போது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இல்லாமல் திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு அழைத்து சென்று ‛‛இப்போது எடுயா பார்க்கலாம்” என்று கடும் வாக்குவாதம் செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் நீர், மோர் பந்தலை அமைத்துள்ளனர். தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நீர், மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தனித்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தவெக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு மண்பாணையில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக நீர், மோர் பந்தல் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தவெக அனுமதி வாங்காமல் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பந்தலை அகற்றினர். தகவல் அறிந்ததும் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா தலைமையில் கட்சியினர் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

எங்களின் தண்ணீர் பந்தலை எப்படி அகற்றலாம்? என்று கேள்வி கேட்டனர். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள், அனுமதி பெற்று தான் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறி அகற்றினர். தவெகவின் அமைத்திருந்த தண்ணீர் பந்தல் அருகே திமுக சார்பிலும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை ஏன் அகற்றவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி மாநகராட்சி ஊழியரை இழுத்து சென்று திமுகவினர் நீர், மோர் பந்தல் அருகே நிற்க வைத்து எடுயா இப்போது.. அகற்றுயா இப்போது என்று அதட்டினர். இதனால் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை பார்வையிட்ட அமைச்சர்கள்

சாலைகள் விரிவாக்கம் ஆய்வு மேற்கொண்ட போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் இருந்து மாங்காடு, அனகாபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அந்த சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்றத்தூர் பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக சாலை விரிவாக்க பணிகள் நடத்த வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்தார். இந்நிலையில் சாலை விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த போது குன்றத்தூர் பகுதியில் வெண்கல சிலைகள் தயார் செய்யும் பகுதிக்கு எ.வ. வேலுவை, தா.மோ. அன்பரசன் அழைத்துச் சென்றார்.

அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலைகள் இங்குதான் செய்யப்பட்டு வருவதாக அமைச்சரிடம் கூறிய நிலையில் அங்கு செய்து கொண்டிருந்த சிலைகளை பார்வையிட்ட எ.வ.வேலு சிலைகள் தத்ரூபமாக இருப்பதாகவும் தனக்கும் ஒரு சிலையை வடிவமைத்து கொடுக்க வேண்டும் என ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றார்.