தமிழிசை சௌந்திரராஜன்: யார் ஏமாற போகிறார்கள் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், ஏமாற்றம் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், அமைச்சரவை மாற்றம் என்பது உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். GKM காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப் பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த இந்த பேட்டி மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ” யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும் என்றார். முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்: திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடக அரசியல் அம்பலமாகிவிட்டது..!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்றார்.

மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திமுக என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பிக்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள்.

புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி மோசடி..! தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலைக்கு என்ன தொடர்பு ..!?

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் ஆன்லைன் நிறுவனம் செயல்படு வருகிறது. இந்த நிறுவனத்தில் .ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது, பொருட்களை வாங்குவது, ரேட்டிங் தருவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என யூ டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த நிறுவனத்திற்கு ஏராளமானோர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

உறுப்பினர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அவர்களின் விளம்பரம் தேடல், ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உரிய அனுமதியின்றி ஆயுர்வேத மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் மோசடியான முறையில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருவதாக கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தங்களது ஆதராவளர்களை சட்டவிரோதமாக ஒன்று கூட்டினார்.

இதுதொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல்துறை சத்தி ஆனந்தனை நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி, கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநகர குற்றப்பிரிவில் சத்தி ஆனந்தன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நிறுவனம் குறித்தும், அதில் உள்ள உறுப்பினர்களுக்கு விளம்பரம் பார்த்தால் வழங்கப்படும் தொகை குறித்தும் விசாரிக்கப்பட்டது.

பண சுழற்சி முறையில் இந்த திட்டம் நடக்கிறதா?, எவ்வளவு பேரிடம் முதலீடு பெறப்பட்டது?, எப்படி தொகையை திருப்ப தர முடியும்?, எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது? என சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காவல்துறை விசாரணை நடத்தினர். இந்நிலையில், நிறுவனத்தால் மோசடிக்கு ஆளானவர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும் கடலூரை சேர்ந்த ரவி பாண்டிச்சேரியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் மருத்துவர்கள் பரிந்துரைக்காத வசிய மாத்திரைகள் தயாரித்து இந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த ரவிதான் சத்தி ஆனந்தனை கூட்டி சென்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க வைத்துள்ளார்.