தெரிந்தவர்… தெரியாதவர்களிடம் அடையாள அட்டை…மொபைல் எண்…. கொடுக்கிறீர்களா..!? உஷாரய்யா… உஷார்…!

சென்னை, ஆவடியை சேர்ந்த கௌதமி என்பவர் தனது பெயரில் யாரோ தனியார் வங்கியில் தனது மொபைல் மற்றும் முகவரியை மாற்றி கடன் அட்டை பெற்று, சுமார் ரூ.7,58,029 வரை அமேசானில் பொருட்கள் வாங்கியுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் ஆய்வாளர் மகாலஷ்மி தலைமையிலான காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் முன்னாள் ஐசிஐசிஐ வங்கி ஊழியரான சைதாப்பேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர் வங்கியில் வேலை பார்த்து வந்தபோது தனது உறவினர்களின் அடையாள அட்டை, மொபைல் எண்களை பயன்படுத்தி அவற்றின் மூலம் கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்கள் பெயரில் பெற்றுள்ளார். அதன்பின்னர் அபுபக்கர் சித்திக் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

மின் இணைப்பு மனுவை பரிசீலிக்க ரூ.3,500 லஞ்சம்.. ஓராண்டு சிறை தண்டனை

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு கடந்த 2013-ல் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் எம்ஜிஆர் நகர் பிரிவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் விஜயகுமார் மனுவை பரிசீலனை செய்ய ரூ.3,500 தந்தால் வேலை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 2013 ஜூன் 6ம் தேதி லஞ்சம் கேட்ட விஜயகுமார் மீது ஊழல் தடுப்பு பிரிவில் ஜெயபால் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஜெயபால் லஞ்ச பணம் ரூ.3,500-யை விஜயகுமாரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமாருக்கு ஓராண்டு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

மணிப்பூர் வன்முறை பத்ரி சேஷாத்ரி சென்னையில் கைது..!

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27-ல் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் ஒரு யூடியூப் சேனலில், இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து குன்னம் காவல்துறை கடந்த 27-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த பத்ரி சேஷாத்ரியை குன்னம் காவல்துறை கைது செய்து, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, குன்னத்திலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கவிதா முன்பு காவல்துறை ஆஜர்படுத்தினர். அப்போது, பத்ரி சேஷாத்ரியை ஆக.11 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் காவல்துறையின் பணியா? என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்சம் கேட்ட தமிழர் கட்சி ஊராட்சி தலைவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார். சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அப்துல்லா அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ..25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைருக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார். அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது… மேலும் ஒருவர் தலைமறைவு.!

சென்னை, அம்பத்தூர், பச்சையப்பன் பிரதான சாலையைச் சேர்ந்த சத்ய நாராயணன், அவரது மனைவி ஷாலினி, மாதவரம் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமஸ் ஆகியோருக்கு திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தைச் சேர்ந்த காயத்ரி அறிமுகமாகியுள்ளளார். சத்ய நாராயணன், தனக்கு பல அரசியல் கட்சியினர் தெரியும், அவர்கள் மூலமாக, கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக காயத்ரியிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்விளைவாக, காயத்ரி உள்ளிட்ட 8 பேரிடம் சத்ய நாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.74 லட்சம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆனால் சத்ய நாராயணன் சொன்னதுபோல வேலை வாங்கித் தரவில்லை. ஆகையால் காயத்ரி உள்ளிட்ட மற்ற 8 பேரும் சத்ய நாராயணன் பணத்தை திருப்ப கேட்டுள்ளனர். இந்நிலையில், காயத்ரி அம்பத்தூரில் உள்ள சத்யநாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் மூவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2021-ல் காயத்திரி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஷாலினி மற்றும் தாமஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சத்ய நாராயணனை தீவிரமாக தேடுகின்றனர்.

தொழிலதிபர் மீது ‘ஹேமாஸ் கிச்சன்’ பெண் உரிமையாளர் மோசடி புகார்..

சென்னை, பெங்களூரு, திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஆகிய இடங்களில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் ‘ஹேமாஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹேமலதா, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர், பெரியசாமி தங்கராஜன் என்கின்ற பி.டி. ராஜன் என்பவருக்கு சொந்தமான, சிறுகனூரில் உள்ள இடத்தில் ரூ.52 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு உணவகம் நடத்த அனுமதி கொடுத்தார். ஆனால் தற்போது, உணவகத்தை நடத்த விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்.

மேலும் இரண்டாவது முறையாக அடியாட்களை வைத்து உணவகத்தை பூட்டிவிட்டார். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பி.டி.ராஜன் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்ப்பணம் கொடுத்த உளவுத்துறை துணை கமிஷனரிடம் திருடர்கள் கைவரிசை…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்படி, சென்னை அடையாறு இந்திரா நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒன்றிய உளவுத்துறை துணை கமிஷனர் ராஜீவ் நாயர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பிறகு விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரையில், கையில் கொண்டு வந்த தனது செல்போன், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் அட்டை, பான் கார்டு, ரூ.1500 அடங்கிய பையை வைத்துவிட்டு, கடலில் இறங்கி துணை கமிஷனர் ராஜீவ் நாயர் தர்ப்பணம் கொடுத்தார். கரைக்கு வந்து பார்த்த போது, அவர் வைத்துவிட்டு சென்ற பை மாயமாகி இருந்தது தெரியவர துணை கமிஷனர் ராஜீவ் நாயர் புகாரின் பேரில் மெரினா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தை போய் பாருங்க..!

சென்னையில் இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தையும் கண்காணித்து கொண்டே இருங்கள் அந்த நிலத்திற்கு முறையாக பட்டா பெற்று வைத்துக்கொள்ளுங்கள். போலி பவர் பத்திரத்தை தயாரித்து உங்களுக்கே தெரியாமல் யாராவது உங்கள் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இன்று சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 20-வது குறுக்குத் தெருவில் வசித்துவரும் ஆந்திர மாநில சேர்ந்த ராஜாராம் என்பவர் ஊறுகாய், முறுக்கு, பிஸ்கட் தயாரித்து கடைகளுக்கு வினியோகம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ராஜாராம் உழைப்பால் சென்னை கொரட்டூர், மூகாம்பிகை நகரில் சுமார் 4800 சதுர அடி நிலத்தை வாங்கி போட்டிருந்தார். இந்நிலையில் கொரட்டூர், மூகாம்பிகை நகரில் இருந்த நிலங்கள் 2 வீட்டு மனைகளாக மாறி இருந்திருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதை கண்டு ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார். விஜி என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் பவர் பெற்று அதன் மூலம் மோசடி செய்ததை கண்டுபிடித்தார்.

இதுபற்றி புகார் அளிக்க ஆவடி காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்திற்கு போன ராஜாராம் அங்கிருந்த மத்திய குற்றப்பிரிவுக்கு பத்திர மோசடி குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து புகாரை ஏற்று ஆவடி காவல் கண்கணிப்பாளர் சங்கர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், உதவி கண்கணிப்பாளர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம், சின்ன வளையம், குடியாத்தம் தெருவை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி விஜி தான் மோசடி செய்தது தெரியவந்தது. எப்படிப்பட்ட மோசடி என்றால், ராஜாராமின் தங்கை விஜி என போலியான ஆவணம் தயாரித்து, அதன்மூலம் ராஜாராம் தனது தங்கை விஜிக்கு பவர் கொடுத்ததாகவும் மாற்றி இருக்கிறார்.

அதன் பின்னர் விஜி அதை வைத்து சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த கொத்தசுப்புராயுடு, ஆந்திர மாநிலம் மதில்மேடு பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பழனி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அஜய் ஆர்சாட் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் ராஜாராமுக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளையும் 3 ஆக பிரித்து விஜி விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை விஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்.. நடைபயணம் கூட டாக்டர் அட்வைஸா இருக்கும்.. !

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை மரியாதை கொடுத்து, எதையும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசல் புரசலாக இருந்து வந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டை எஸ் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

அண்மைக்காலமாக அண்ணாமலையை எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நானும் செய்திகளில் பார்த்தேன். அனேகமாக அவருக்கு சுகர் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. தினமும் நடக்க வேண்டும் என டாக்டர் கூறியிருக்கலாம். அதனால் தான் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். எனவே நடைப்பயணத்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.

சும்மாவே மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியில் இத்தனை பேர் உள்ளனர் என கூறுவதெல்லாம் நம்மை நாமே புகழ்ந்து கொள்வது. தற்போது நடைபெறும் ஆபரேஷன், தேர்தல் முடிவான போஸ்ட்மார்டத்தில் தெரிந்து விடும். பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தும். ஆனால் இது அண்ணாமலை உதவியால் கிடையாது. இவ்வாறு எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்தார்.