சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்: தமிழ்நாடு, கேரளா பக்கம் போங்க..! மகாராஷ்டிராவில் இந்தி திணிக்க தேவையில்லை..!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நிலவுகிறது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இம்மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறும்போது, “அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்கத் தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள்.

பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. இந்தி மொழிப் பாடல்களை நாம் ஏற்கெனவே பாடுகிறோம். இதன் பிறகுமா எங்களுக்கு இந்தி போதிக்கிறீர்கள்?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் மராத்திதான் முதல் தேவை. இந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளபோது அதை பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவை காப்பாற்றும் கூட்டணி கட்சி முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பேன்..!

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதலமைச்சர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த 3 கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இக்கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளுமே பெரிய கட்சிகள் என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டுமென உத்தவ் தாக்கரே கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அதனை ஏற்கவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு, எந்த கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவரே முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் தேர்வு செய்யும் எந்த முதலமைச்சர் வேட்பாளராக இருந்தாலும் நான் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை காப்பாற்றுவதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Uddhav Thackeray: அமித் ஷா பூட்டிய அறைக்குள் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த காரணம் என்ன..!?

மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தரவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு அமோக வெற்றி பெற்றது. அதேபோல அந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் தொடர இந்த கூட்டணி முனைப்புடன் செயல்பாடு வருகின்றது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பாஜக கூட்டணி விரும்புகிறது.

இந்நிலையில் பாஜக தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் “சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.

உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பாஜகவால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும். 30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பாஜக பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன். வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சிவசேனா உத்தவ் அணி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனைக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில், சிவசேனா உத்தவ் அணி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிற்கு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மும்பை அருகே மீரா பயாந்தர் மாநகராட்சியில் கழிப்பறை கட்டி, பராமரிக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல் என்று சஞ்சய் ராவத் புகார் அளித்திருந்தார். இந்த ரூ.100 கோடி ஊழல் புகாரில் பாஜகவைச் சேர்ந்த கிரிட் சோமையா, அவரது மனைவிக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து, இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டதாக மேதா சோமையா, சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மும்பை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர்கள், இந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் அளிக்க கோரியும் இரு மனுக்களை தாக்கல் செய்தனர். இவற்றை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி, சஞ்சய் ராவத்துக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மகாராஷ்டிர தேர்தல்: தொகுதி பங்கீட்டில் பாஜக கூட்டணிக்குள் மோதல்..!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் – டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பை வந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது என பாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Sharad Pawar: சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம்..!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

 

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சரத் பவார், “சிந்துதுர்க்-ல் இருந்த சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம். இது அனைத்து சிவ பக்தர்களுக்கான அவமதிப்பு” என சரத் பவார் பேசினார்.

Uddhav Thackeray எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உத்தவ் தாக்கரே தலைமையிலான போலி-சிவசேனா, சரத் பவாரின் போலி-என்சிபி மற்றும் மகாராஷ்டிராவில் எஞ்சியிருக்கும் காங்கிரஸ் உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் பொருந்தாத உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோரிக்ஷாவைப் போன்றது. அது எப்படி மகாராஷ்டிராவுக்கு நல்லது செய்யும், எப்படிச் செய்யும்” கூறி இருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமித் ஷாவின் கருத்திற்கு, பால்காரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, “எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா… நான் தெளிவாகச் சொல்கிறேன். மோடியை மகாராஷ்டிரா ஏற்காது. தாக்கரேவும், பவார்களும்தான் இங்கு சத்தம் போடுவார்கள்” என்றார். எந்தக் கட்சி போலி, எது உண்மையானது என்பதை மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்வார்கள் உத்தவ் தாக்கரே அமித் ஷாவை கடுமையாக சாடினார்.

Uddhav Thackeray: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படுவது சிவசேனா கட்சியா? ‘சீன’சேனா கட்சியா?

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்பி, எம்எல்ஏக்களை வளைத்து போட்டார். மாநிலத்தின் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பின்னர் உத்தவ் தாக்கரே தனது தலைமையில் ஒரு சிவசேனா கட்சியை உருவாக்கினார். இதற்கிடையே உத்தவ் தலைமையிலான சிவசேனாவை ‘போலியான சிவசேனா’ என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே, ஏக்நாத் தலைமையிலான சிவசேனாவை ‘சீன சேனா’ என்று கிண்டலாக கூறினார்.

உத்தவ் தாக்கரே: எங்கள் தங்கைகள் சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடுகின்றனர்…! அவர்களின் பின்னால் அண்ணன்களாக நாங்கள் அணிதிரண்டு இருக்கிறோம்..!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தில் சிவசேனா (உத்தவ் பிரிவு)தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், சுனிதாவும் கல்பனாவும் எங்கள் தங்கைகள். சர்வாதிகார அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர். அவர்களின் பின்னால் அண்ணன்களாக நாங்கள் அணிதிரண்டு இருக்கிறோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.