மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சரத் பவார், “சிந்துதுர்க்-ல் இருந்த சிவாஜி மகாராஜாவின் சிலை இடிந்தது ஊழலுக்கான உதாரணம். இது அனைத்து சிவ பக்தர்களுக்கான அவமதிப்பு” என சரத் பவார் பேசினார்.