மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொதித்து எழுந்த கனிமொழி எம்பி மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து கனிமொழி இன்று பொங்குகிறாரே, அன்று 1989 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை மறந்துவிட்டாரா…? அவர் அவமானப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனி இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என சபதம் போட்டார். அப்படிப்பட்ட திமுக இன்று திரௌபதி குறித்து பேசுகிறார்கள். இது என்ன அநியாயம் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் தகவலுக்கு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு சம்பவம் சட்டசபையில் நடைபெறவே இல்லை. இது ஜெயலலிதா போட்ட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்காக ஜெயலலிதா தனது வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அவருடன் இருந்த திருநாவுக்கரசரே தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரத்தில் திருநாவுக்கரசர் கூறியது, எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக கருணாநிதி வந்தார். அப்படி முதலமைச்சரான போது அவரே நிதித்துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டார். 1989 -ம் ஆண்டு மே மாதம் மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பட்ஜெட் காப்பியை அதிமுக எம்எல்ஏ கிழிக்க முயற்சித்தார். இதை உணர்ந்த கருணாநிதி இரு கைகளை பரப்பி பட்ஜெட் பேப்பரை எடுக்காத வண்ணம் குனிந்தபடியே தடுத்தார். அப்போது அவருடைய கண்ணாடி கீழே விழுந்தது. உடனே திமுகவினர் கருணாநிதியை மூக்கில் குத்தியதால்தான் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாக சொன்னார்கள்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது அடி விழுந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரான என் மீது அடி விழுந்தது. கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொறடா பின்னாடி இருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியில் பாதியை நான் வாங்கிக் கொண்டேன். என் உச்சி மண்டை வீங்கியது. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக் கொண்டார்.
ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என வதந்தி பரவியது. கருணாநிதி முகத்தில் குத்தும் விழவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை. ஆனால் சேலை இழுப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அவருடைய வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததை நானே பார்த்தேன் என திருநாவுக்கரசர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டசபையில் கூறியிருந்தார்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா தலைமுடி கலைந்தபடியே வந்து தனது சேலையை துரைமுருகன் உருவியதாகவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னை பார்த்து சிரித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை துரைமுருகன் மறுத்துள்ளார். கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்தது.
அப்போது பேசிய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 இல் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். இதில் என் சேலை கிழிந்துவிட்டது. ஆளும் கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்றார். உடனே துரைமுருகன், நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என தெரிவித்தார்.