திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 -ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22 -ந்தேதி சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்ஜிஆர் திருவுருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அன்றைய தினம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்திய எம்ஜிஆர் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் அமைத்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் எம்ஜிஆரின் திருவுருவ சிலையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். இதனை அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட காவல்துறை அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சிலையை உடைத்த நபரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதியளித்தனர்.
இந்நிலையில் சிலையை உடைத்த நபர் குறித்து சிறுகனூர் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரெட்டிமாங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிந்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர். இதுபற்றி காவல்துறை கூறுகையில், ‘அதிமுகவில் உட்கட்சி பூசலால் உறுப்பினராக இருந்து வரும் செந்தில்குமாருக்கு பூத் கமிட்டியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், கட்சி மீது கடும் அதிருப்தியில் மதுபோதையில் சிலையை உடைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவித்தனர்.