திமுக இளைஞரணியினர் “கெட் அவுட் மோடி..” என முழக்கமிட்ட ட்ரெண்டாகும் வீடியோ..!

பிரதமர் தமிழகம் வந்தால் அவரை ‘கெட் அவுட் மோடி’ சொல்லி விரட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்ட நிலையில், திமுக இளைஞரணியினர் ‘கெட் அவுட் மோடி’ கூறி வீடியோவை வெளியிட்டடு இருக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு கூறியிருந்தார். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயன்றால், Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக, ‘Get Out Modi’ என்று கூறி துரத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு பாஜக மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இது குறித்து பேசிய அண்ணாமலை, “உலக நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து அந்த மனிதனை வரவேற்பதற்காக கைகட்டி காத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் Get Out Modi என சொல்லி பாருங்கள்” என்று சவால் விட்டிருந்தார். மட்டுமல்லாது துணை முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவதாகவும் பாஜகவினர் கூறியிருந்தனர்.

இது இருவருக்கும் இடையேயான வார்த்தைப்போராக வெடித்தது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த உதயநிதி, “வீட்டைதானே முற்றுகையிடப் போகிறார்கள்? வரச்சொல்லுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. முடித்துவிட்டு வரப்போகிறேன்” என்று கூலாக பதிலளித்துள்ளார். பதிலுக்கு அண்ணாமலை, “நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்” என கூறியுள்ளார். இரு இளம் தலைவர்களின் கருத்து மோதல் தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் கடுமையாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர்களும், மாணவர்களும் ‘Get Out Modi’ என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை.!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாவட்ட – மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். வயது 70. ஆனால் 20 மாதிரி நான் இங்கே நிற்கிறேன். இளமைக்கே உரிய அந்த வேகம் திரும்புகிறது. எல்லாப் புகழும் இந்த இளைஞரணிக்குத்தான்.

2019 ஜூலை 4-ம் தேதி திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல், உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறார். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணிக்கு சேர்த்து, கழகத்தின் வலிமையை இன்னும் கூட்டியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்திருக்கிறார். அவர் காட்டிய ஒற்றை செங்கல் உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி மறக்க முடியும்? நம்முடைய எதிரிகளாலேயே அதை மறக்க முடியவில்லை.

இன்னும் அதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிப் பணி – ஆட்சிப் பணி ஆகிய இரண்டிலும், ஒரே நேரத்தில் மிகமிகச் சிறப்பாக செயல்பட்டு, கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயரை வாங்கித் தருகிறார் உதயநிதி. கடந்த சில ஆண்டுகளாக திமுகவை நோக்கி வருகிற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் திமுக கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்கிற பேச்சாளர்களாக மாற வேண்டும். அடுத்தவர்களையும் மாற்ற வேண்டும். பேஸ்புக், யுடியூப், வாட்ஸ்அப் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட், டெலிகிராம் என்று எல்லா சமூக ஊடகங்களையும் நம்முடைய கொள்கைகளை பரப்பவும், திமுக வளர்ச்சிக்காகவும் நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இயக்கம் எந்த நோக்கத்துக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆட்சி இது. இதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் இப்போது ‘இந்தியா’ கூட்டணியை உருவாகி இருக்கிறது. இந்தியா-என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரள்கிறார்கள், அலறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள். அமித்ஷா, தமிழ்நாட்டிற்காக ஒன்றிய அரசின் புது திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லை ஏற்கனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா, இல்லை.

ஏதோ பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாதயாத்திரையா? இல்லை, குஜராத்தில் 2002-ம் ஆண்டும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிற பாவ யாத்திரை. இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அவர். நான் கேட்கிறேன், இந்த இரண்டு மாதமாக பற்றி எரிகிற மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? முடியவில்லை. அமைதியாக இருக்கிற தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தோடு பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார்.

தி.மு.க. குடும்பக் கட்சி என்று சொல்லியிருக்கிறார். கேட்டுக் கேட்டு புளித்துப் போன ஒன்று. நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். வேறு ஏதாவது மாற்றி சொல்லுங்கள் என்று. பாஜகவில் எந்தத் தலைவரின் வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளைக்கு காலையில் விலகி விடுவார்களா? பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கிற வாரிசுகளின் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும்.

அதனால் வேறு ஏதாவது புதிதாக சொல்லுங்கள் அமித்ஷாவே. இலங்கை பிரச்னையை பற்றியும் பேசியிருக்கிறார். தமிழ் மக்களின் ரத்தக்கறை படிந்த ராஜபக்‌சேவை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தவர்களுக்கு இலங்கை பிரச்னையைப் பற்றி பேச உரிமை இருக்கிறதா? அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது பற்றியும் பேசியிருக்கிறார். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அமித்ஷாவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தானே இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கிற நீங்கள், பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பாஜக பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜக.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்ச நீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான ஐஆர்எஸ் அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. தமிழை தமிழினத்தை தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற இந்தியாவிற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம், உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சிக் களமாக அமையப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.