சீமான் ஆவேசம்: மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா..!?

என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா? – நீட் தேர்வு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.

மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.

சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் என் மாநிலத்தில் மட்டும் என் பிள்ளையின் துப்பட்டாவை எடுக்கிறார்கள். பூணூல், அரைஞாண் கயிறு அறுக்கப்படுகிறது. முழுக்கை சட்டை கத்தரிக்கப்படுகிறது.

மாணவிகளின் உள்ளாடையை கூட கழற்ற சொல்கிறார்கள். நீட் தேர்வு மையங்களில் காவல் துறைக்கு என்ன வேலை? இத்தூண்டு மூக்குத்திக்குள்ள பிட்டை கொண்டு போய் பார்த்து எழுதிட முடியும் என நம்புகிறதா இந்த சமூகம்? வோட்டு போடும் இயந்திரத்திலும் எந்த கோல்மாலும் செய்ய முடியாது என்றும் நம்ப சொல்கிறார்கள் என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசம்..! நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்..!

நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது என சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆவேசமாக பேசினார். நடிகை பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரவு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமான வித்யா தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகை பலாத்கார வழக்கில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானர். சீமானை இரவு 8 மணிக்கு ஆஜராக காவல்துறையினர் வரவழைத்தனர். இதனால் சென்னை வடபழனி சொகுசு விடுதியிலிருந்து சீமான் புறப்பட்டார். ஆனால் நடுவழியிலேயே நாங்கள் சொல்லும் நேரத்துக்கு வரலாம் என்று காவல்துறை உத்தரவிட சுமார் 1 மணிநேரம் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகேயே நடுசாலையில் சீமான் காத்திருந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு மேல், சீமானை காவல் நிலையத்துக்கு வரவழைத்தது.

ஆனால் சீமானின் வாகனம், காவல் நிலையத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சீமானை காவல்நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுமாகிய வித்யா ராணியும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, நாங்கள் ஒருவர் பின்னால் நின்றால் உயிர் போகிறவரை நிற்போம். என்னையே ஏன் பார்த்து இவ்வளவு பயப்படுறீங்க? என்னை அனுப்புவதாகத்தானே சொன்னீங்க.. அப்புறம் ஏன் தடுத்து பிரச்சனையை உருவாக்குறீங்க? நான் ஏதாவது பேசினேனா? ஆட்சியும் அப்படித்தான்… போலீசும் அப்படித்தான்.. அரசாங்கமும் அப்படித்தான்.. என்னமா நினைச்சுகிட்டு இருக்கீங்க.. உங்க கையில் எதுவும் இல்லை.. மேல சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்.. உங்க பரிதாபமான நிலைமை புரியது..

ஒரு தனிமனிதனை அரசியல் செய்யவிடாம இப்படி பண்றீங்க.. எங்கப்பனை ஒழிச்சீங்க.. அடுத்த தலைமுறை தமிழன் வந்தா அவரை ஒழிக்க ஆயிரம் வழி தேடுவீங்களா? நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்.. எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது.. யார் மக்கள் பிரச்சனையை பேசுறாங்கன்னு கண்ணுக்கு தெரியலையா? இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன் என வித்யா ராணி தெரிவித்தார்.

கருணாஸ் ஆவேசம்: ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அண்ணாமலைக்கு பண்பு இல்லை..!

இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சோசியல் மீடியாவில் திமுகவினர் கெட் அவுட் மோடி என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பாஜக தரப்பில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி விவகாரம் தொடர்பாக இரு கட்சியினர் மத்தியில் மோதல் போக்கு உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் அண்ணாமலை குறித்து கருணாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கைதான். ஏற்கனவே தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது, தாய்மொழியான தமிழை விழுங்க வேண்டும் என்று இந்தி திணிப்பதற்கான முயற்சியை எடுக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழக தலைவர்களே வரவேற்பது வேதனையாக உள்ளது.

இது எவ்வளவு பெரிய துரோகம். பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தமிழ் மொழியை அழிக்கக் கூடிய திட்டம் என்று தெரிந்தும் ஆதரிக்கிறாரே.. கட்சியில் பொறுப்பில் இருக்கிறோம் என்று பேசுகிறார் என்றால்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதே தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 3-வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. 3 என்ன.. 300 மொழிகளை கூட கற்றுக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது.

அதற்காக பல மொழி பேசும் தேசத்தில் ஒரே மொழியை கற்பிக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை மாற்றுங்கள். தமிழ் மொழி தானே இந்தியாவின் மூத்த மொழி. 3 மாதத்தில் இந்தியை கற்றுக் கொள்ளலாம் என்று அண்ணா கூறினார். 3 மாதத்தில் கற்றுக் கொள்வது கடந்து அந்த மொழியில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்பதே கருத்து. அதேபோல் முன்பாக கோபேக் மோடி என்று கூறினோம். இப்போது கெட் அவுட் மோடி என்று கூறுகிறோம். படித்து அதிகாரியாக இருந்த அரசியல்வாதி ஒருமையில் பேசலாமா? அரசியல்வாதியாக இருந்திருந்தால் அண்ணாமலைக்கு பண்பு இருந்திருக்கும். அவர் திடீரென வந்தவர் என்பதால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்த மண், மொழி, மக்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். கும்மிடிபுடி தாண்டினால் யாரையும் தெரியாதா? எங்களுக்கு ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலம் தெரியாது என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. வடமாநிலத்தில் இருப்பவர்களை ஆங்கிலம் படிக்க சொல்லுங்கள். இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.