உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி: ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை..! வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்..!

“தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டுச் சொத்தை அல்ல, நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை. அதைக் கேட்டால் ஒருமையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசின் காதில் விழும்படி மக்களின் குரலாக ஒலித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் டெல்லி முதலாளி மோடியின் பின்னால் ஒளிந்துகொண்டு திமிராக ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். நாக்பூரில் பாடம் கற்றவரிடம் நாகரிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், அண்ணாமலைக்கு துளியாவது தமிழ் மக்கள்மீது அக்கறை இருக்கும் என நினைத்தது தவறு என அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், துணை முதலமைச்சரை விமர்சிப்பது மக்களை விமர்சிப்பதற்குச் சமம் என்பது பாவம் அவருக்குத் தெரியவில்லை; பரிதாபம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை இல்லையில்லை விசமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எங்கே தனது டெல்லி முதலாளிகள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய முதலாளிகளைக் குளிர்விக்க, தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள, மத வெறுப்பு, தமிழ் மொழி, தமிழ் நிலம் சார்ந்த வெறுப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார். முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். என ஐயன் வள்ளுவன் சொன்ன அறம் எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், உரிமை பறிக்கப்படும்போது, கொஞ்சம் தட்டிக் கேட்க வேண்டியும் இருக்கிறது.

இதை துணை முதலமைச்சரின் குரலிலேயே சொல்கிறோம், தமிழர்கள் நாம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; அடிபணிய மாட்டோம். தமிழக உரிமைகளைக் கேட்கும் எங்களின் குரல் போராட்டமாக மாறுவதும் மாறாமல் இருப்பதும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் கையில்தான் உள்ளது. ஒன்றியப் பிரதமர் மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது தமிழ்நாட்டு மக்கள் “Go Back Modi” எனத் துரத்தி அடித்தார்கள்.

இந்த முறை மீண்டும் அதைத் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால், “Go Back Modi” கிடையாது, “Get Out Modi” எனச் சொல்லி துரத்துவார்கள். என்பதை மீண்டும் ஒருமுறை அரசியல் கோமாளி அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.” என ராஜீவ் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் விவகாரம்: ஜாதி காரணம் அல்ல… தனி மனித பிரச்சினையே காரணம்..!

“வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ.., அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக CBCID இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதிடுகையில், “வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம். கடந்த 2 வருடங்களாக இந்த வழக்கை CBCID விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 3 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் CBCID மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை நடத்தினர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 87 டவர் லொகேஷன் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த அழிக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்கள், நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள், அங்கிருந்தபடி தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் அறிவியல் பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் பேசிய நபர்களின் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை தொட்டியில் எந்த கழிவுகளும் கலக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சரியாக இரவு 7.35 மணிக்கு மேல் தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது வழக்கின் விசாரணை முடிந்து விசாரனை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்,” என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.

பொது இடங்களிலுள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது.

யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க காவல்துறைருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும்.

அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினர், சமுதாயம் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைக்கலாம். தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

பிரச்சாரம், பொதுக்கூட்டம், தர்ணா மற்றும் கூட்டங்களின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் நடலாம். இதற்கு முன்கூட்டியே வாடகை வசூலித்துக்கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம். அனுமதி காலம் முடிந்த பின்னர் தற்காலிகக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி: நீங்கதான் வீரன் ஆச்சே..! ஆதாரத்தை குடுங்க சீமான்..!

சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சீமானின் தொடர் சர்ச்சை பேச்சால் சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து நீலாங்கரையிலுள்ள சீமான் வீடு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்திலா… பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா… பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா… ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது.

இதற்குப் பின்னரும் தமிழக மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். தமிழினத்திற்காக உழைத்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை, அதை வைத்து சம்பாதிப்பதை, பிஜேபி, RSS அமைப்புகளுக்கு கூலி வேலை பார்ப்பதை தமிழக மக்கள் என்றைக்கும் அனுமதித்து நாங்கள் பார்த்ததில்லை. இவர்கள் நிச்சயமாக விரட்டி அடிக்கப்படுவார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சீமானிடம் பெரியார் குறித்த ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால், சீமான் அதற்கான எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அதற்குப் பின்னரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருகிறார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் சீமானிடம் கேள்வி கேட்பதற்காக வந்திருக்கிறோம்.

இதற்கும் சீமான் பதில் சொல்ல வரவில்லை என்றால் அடுத்தகட்டமாக எங்கு அரசியல் செய்கிறாரோ அந்த தேர்தல் களத்தில் அதற்கான எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவிப்போம். எந்தவொரு பிரச்னைகளுக்கும் சீமான் எதுவும் இதுவரை பேசவில்லை. இதுவரை எந்தவொரு பிரச்னைக்காகவும், சிக்கல்களுக்காகவும் மக்களுக்காக சீமான் வந்து நின்றது கிடையாது. மீனவப் பிரச்னை முதல் ஜாதிப் பிரச்னை வரை எந்த மக்கள் பிரச்னைக்காகவும் அவர் வந்ததில்லை. ஆதரவு தெரிவிப்பது, அறிக்கை அளிப்பது, பத்திரிகையாளர் முன்பு தைரியம், வீரம், கொச்சை பேசுவதை தவிர சீமான் எதுவும் செய்யவில்லை. சீமானின் அச்ச உணர்வையும், கோழைத்தனத்தையும் அம்பலப்படுத்துவதே எங்கள் வேலை. சீமான் பாஜகவுடன் வெளிப்படையாக நிற்கிறார். சீமானுக்குப் பொய் செல்வது மட்டுமே வேலை என திருமுருகன் காந்தி விமர்சனம் செய்தார்.

சென்னையில் திடீரென முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு…!

“அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற போஸ்டர்கள் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் மற்றும் மக்களின் பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் போஸ்டர் கலாசாரம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அப்படி, ஒரு போஸ்டர் தான் இன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டு தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கி உள்ளது.

“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகங்களுடன், வேறு எந்தக் குறிப்பும் இன்றி சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் இல்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர். அரசியல் ரீதியான போஸ்டர் தானா? அல்லது வேறு எதும் விளம்பரமா? என்றும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதற்கிடையே பெரியார் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வரும் நிலையில், சீமானுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.

இப்படியான சூழலில், பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளன. கட்சிக்கார்களா? அல்லது எதிர்க்கட்சியினரா? இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.

மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்: குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்யாதீர்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது. 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது. சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

7500 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.