Tamilisai Soundararajan: அன்னபூர்ணா விவகாரம்..! அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே..!’’

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

கருணாஸ்: “அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைப்பது பாஜகவின் சர்வாதிகார போக்கு…! ”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையைப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. இதை ஒட்டுமொத்த தமிழக மக்கள், தமிழக வியாபாரிகளுக்கு நேர்ந்த அவமானம்” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

நாட்டின் குடிமகனாக ஜிஎஸ்டியை நியாயமாக ஏற்கிறேன். நான் சம்பாதித்ததில் 18% ஜிஎஸ்டி வரியாகக் கொடுக்கிறேன். இதனை நாட்டு மக்களுக்காக செலவிடவில்லை. இந்த ஜிஎஸ்டியை அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கிறார்கள். அவர்களை வளர்க்க ஏன் நான் வழங்க வேண்டும்? அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையைப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது சர்வாதிகார போக்கு. பாஜக என்பது ஏமாற்றுக்கூட்டம். இதை ஒட்டுமொத்த தமிழக மக்கள், தமிழக வியாபாரிகளுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதுகிறேன் என கருணாஸ் பேசினார்.

ஜோதிமணி வலியுறுத்தல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். பாஜக,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.

அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.

ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத ஜிஎஸ்டி என்ன கொடுமை மேடம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.