மு.க.ஸ்டாலின்: திமுகவிற்கு எதிராக “தினுசு தினுசா” எதிரிகளை உருவாக்கும் பாஜக..!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று மாலை, நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, திமுக கழக நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வளர்த்தெடுத்த எனதருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த சமயம் உங்களிடம் நான் தொலைபேசியில் பேசும்போதே, தேர்தல் முடிந்தவுடனே உங்களை எல்லாம் சந்திக்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி அவர்களிடம் பாக முகவர்களை அறிவாலயத்துக்கு அழைத்துவரச் சொல்லி இருந்தேன். அவரோ, “பாக முகவர்களோடு என்னுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அதனால் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி லேட்டாக இருந்தாலும் மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் செயல்வீரர் முத்துசாமி அவர்கள். அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தலைப் பொருத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்து இருக்கிறோம்! மிக மோசமான தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை! ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களைப் போன்ற உடன்பிறப்புகள்தான்! அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை நாம் பெற்று இருக்கிறோம்.

பொதுவாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்களிடம், களநிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என நான் விசாரிக்கும்போது, “இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்து இருக்கிறோம்; மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்!” என்று சொல்வார்கள்… ஆனால் உங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்து தொடர் வெற்றியை நீங்கள் உறுதிசெய்து இருக்கிறீர்கள்! அதற்காக உங்களுக்குச் சிறப்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தல் பணி என்பது, கட்சிக் கூட்டம் மாதிரி கிடையாது. கடுமையான களப்பணி அது! ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நிமிடமும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நம்மைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் நம் கொள்கைகள் – திட்டங்கள் – சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு ஏதாவது குறைகள் – கோபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண்கிறோம் என உறுதியளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். தேர்தல் நாள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை வாங்கும்வரை உணவு – தண்ணீர் – குடும்பம் – தூக்கம் என அனைத்தையும் மறந்துவிட்டுத் தவறுகள், முறைகேடுகள் எதுவும் நடக்காத அளவுக்கு விழிப்போடு பணியாற்ற வேண்டும்! அப்படி பணியாற்றி வெற்றியைத் தேடித்தந்திருக்கும் உங்களை பாராட்டுவது மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தலைமைத் தொண்டனாகப் பெருமை அடைகிறேன்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்குத் தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறோம்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாகக் கருதப்பட்ட முக்கியமான தேர்தல்.

அதில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.

அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள். இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள்! உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்! நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!

என்னை பொருத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026-இல் களம் காண்போம்! உங்கள் உழைப்பைக் கொடுங்கள்! வரலாறு காணாத வெற்றியைக் காண்போம்! நன்றி! வணக்கம்!”என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: வெறுப்பரசியலின் ஆணிவேர் அறிவாலயம்தான்..!

வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம்தான் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருந்தார்.

யோகி ஆதித்யநாத் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பாஜக தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.

இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தொடர்ந்து சொல்லெறிபவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இந்துக்கடவுள்களைக் கொச்சைப் படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்?

உங்கள் அரசியல் வாழ்வைக் காத்துக் கொள்ள தமிழக மக்களை இனம், மொழி மற்றும் சமூக வேறுபாடுகளால் பிரித்தாள முயற்சிக்கும் உங்களுக்கு, அதை சுட்டிக்காட்டினால் எதற்கு இத்தனைக் கோபம் வருகிறது? மேலும், ஊர் முழுக்க மூன்று மொழிக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளில் “இருமொழி தான் வேண்டும்” என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும் கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என்பதை உங்கள் அறிவாலய அரசே நன்கு உணரும். இந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல், “வக்ஃப் வாரிய திருத்த மசோதா”-விற்கு எதிரான தீர்மானம் என்று நீங்கள் கிளப்ப முயலும் புது புரளியும் கூடிய விரைவில் நீர்த்துப்போகும், நீங்கள் கட்டமைத்த திராவிட மாயைகளிலிருந்து தமிழகம் கூடிய விரைவில் மீளும்! என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது ஒன்றே ..!

நமக்கு இடையே சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நோக்கம் 2026-ல் திமுகவை வீழ்த்துவது. என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என பேசப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள் அக்கட்சியில் வலுத்து வந்தன.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அண்மையில், திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என கூறி இருந்தார். இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒன்று நமக்கு இடையே சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் நம்முடைய இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026-ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள். அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது.

சேகர்பாபு பேச்சு: ஊசிப் போன பண்டம் பாஜக..! திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள்..!

ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசியிருந்தார்.

சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்றைக்கு 33-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பதை உறுதி அளிக்கிறோம்.

குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அண்ணாமலை ஒரு தற்குறி படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள். ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசிப் போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-ல் மக்கள் தூக்கி எறியவும் தயாராக இருக்கின்றனர்.

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக. இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை, வரைபடத்தில் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அலற்விட்டுள்ளோம். 2026 தேர்தலிலும் 200 தொகுதிகள் என்பது நிச்சயம்; 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்: அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது..! இந்த முறை அதுவும் கிடைக்காது..!

அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது, இந்த முறை அதுவும் கிடைக்காது, தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகரும், முன்னாள் MLA -வும், எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026-ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலை முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை: பாஜக தீண்டத்தகாத கட்சி..! பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை..!

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாமக மூத்த தலைவர் ஜிகே மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மகன் விஜய் விகாஸ் இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தினார். அப்போது அண்ணாமலைக்கு எழுந்துநின்று கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.

இதனால் 2021 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி போல் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று அறிவித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

பாஜக கட்சி நோட்டா கட்சி.. தீண்டத்தகாத கட்சி.. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள். அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி சரியான நேரத்தில் பேசுவோம்.

பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேசிய கட்சி அப்படி பயணிக்க முடியாது. எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி: அண்ணாமலை தம்பி இனி பார்த்து சபதம் எடுங்க…!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அட்வைஸ் கொடுத்துள்ளார். கரூர் மாவட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் போதே தொடங்கிவிட்டது.

ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரும் ரஃபேல் வாட்ச் விவகாரம், விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தை வைத்து அண்ணாமலையை செந்தில் பாலாஜி சாடினார். அதேபோல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார். கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசுகையில், பெரியார் கருத்துகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் கோயம்புத்தூரில் பெரியார் மாநாடு நடத்தப்படும்.

பாஜகவினர் ஏதோ ஒரேயொரு தொகுதியில் வென்றுவிட்டதால், கோயம்புத்தூரே அவர்களுக்கு சொந்தம் என்பதை போல் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். கோயம்புத்தூர் எப்போதும் பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். கோயம்புத்தூரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வென்றுவிட்டதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் சட்டமன்றத் தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு.. நாடாமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள்.. தம்பி.. இந்த ஊரும் பெரியார் மண்தான்.. உனக்கு அங்கேயும் வேலையில்ல.. இங்கேயும் வேலையில்ல. தமிழ்நாட்டில் இனி எங்கேயும் வேலையில்லை என்று கூறிவிட்டனர். உலகத்திலேயே நான்தான் அறிவாளி என்று நினைத்து கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டு.. ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டார்.

சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல், செருப்பு போட மாட்டேன் என்று புது கதையை சொன்னார். சபதம் எடுப்பதில் அட்வைஸ் தம்பி, தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இனி வாழ்நாள் முழுக்க உன்னால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாநிலத் தலைவர் என்ற பதவியை எடுத்துவிட்டால், அதிக நாட்கள் அங்கு இருக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் என்னிடம் கேட்டால், அவர் அங்கேயே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. அரசியலுக்கு வந்துவிட்டால் சில ஆண்டுகளிலேயே உச்சத்தை எட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த பட்டியலில் செருப்பு போடாமல் சாட்டையடித்து கொண்டவரும் இருக்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று உழைத்து இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்..! பாஜக, திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்..!

நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம்.

ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும். இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு இடிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’

இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என விஜய் தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்: அண்ணாமலை சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.