மு.க.ஸ்டாலின் விமர்சனம்: எடப்பாடி பழனிசாமியின் ஆணவம் தான் அதிமுகவின் தொடர்ந்து தோல்விக்கு காரணம்..!

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கொண்டார்.

மேலும், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினேன். கழக ஆட்சி அமைந்ததும், அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வாக்குறுதி அளித்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே அதற்காக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனி துறையை நான் உருவாக்கினேன்.

பெரும்பாலான மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். அப்படி வந்த மனுக்களில் பெருபான்மையான மனுக்கள் எனக்கு வீடு இல்லை, வீடு கட்டுவதற்கு இடம் இல்லை, இடமோ, வீடோ அதை வாங்குவதற்கு பணம் இல்லை, இதுவரையில், புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறேன் என்று பல பேர் மனு அளித்திருந்தார்கள்.

மக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில், வருவாய்த் துறைக்கு நான் ஒரு உத்தரவிட்டேன். “வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைகளை எந்தளவுக்கு வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்குங்கள்” என்று நான் சொன்னேன். நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. ஆனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன்.

தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுத்த காரணத்தால், 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து இன்று வரை, மொத்தமாக இந்த மூன்று ஆண்டுகளில், 10 இலட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையை வழங்குவதிலும், திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமல்ல, இதற்கு சமதர்மக் கொள்கைளும் உண்டு. அதைத்தான் “சுயமரியாதைச் சமதர்மம்” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சமூகநீதியும், பொருளாதாரத்தில் சமநீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே மனை சொந்தம் என்று சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். “நாங்கள் பல்லாண்டு காலம் ரத்தம் சிந்தி போராடியும் கிடைக்காத உரிமையை ஒரு துளி பேனா மையில் நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்” என்று பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார். அதிகப்படியான நிலங்களை இலவசமாக ஏழை எளிய பாட்டாளிகளுக்கு வழங்கிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இன்றைக்கு உங்கள் முகங்களில் தெரிகின்ற மகிழ்ச்சிதான் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு.

ஆட்சிப் பொறுப்பேற்றபோது சொன்னேன்… “மு.க.ஸ்டாலின் எனும் நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன் – நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்” என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான இந்தியா டுடே, இந்தியாவின் சக்தி வாய்ந்த ‘டாப் 10’ தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்த பெருமையோ, புகழோ இல்லை. இந்த பெருமையையும், புகழையும் வழங்கியது, தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான்! உங்களுடைய அன்பும், ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்! தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன்! போராடுவேன்.

இந்த உழைப்பின் பயன்தான், அனைத்து புள்ளி விவரங்களையும் வெற்றிகரமாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பேப்பரிலும், ரெக்கார்ட்டுகளிலேயும் ‘ஃபர்ஸ்ட் வந்துவிட்டோம்’ என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்னால், நமக்கு பின்னால், நம்மை முந்தி வெற்றி பெறவேண்டும் என்று இன்னும் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இதைத்தான் நான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

அந்த எதிர்பார்ப்புடன் தான் மாவட்டம்தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறேன். இது பற்றியெல்லாம் எதுவும் புரியாத ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கிஞ்சித்தும் கவலப்படாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன சொல்கிறார்.. “மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கலைஞர் பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி வருவதாக” உளறியிருக்கிறார்.

அதை படித்ததுமே சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம்; ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் இப்போது சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

நம்முடைய ஆட்சியில், நவீனத் தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி தலைவர் கலைஞர் பெயரால், மக்கள் நலனுக்காக நாம் செய்து கொண்டு வருகின்ற மூலதனச் செலவுகள், என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன; என இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். நான் கேட்கிறேன்…

எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோமே… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா? இல்லை, தென் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் – இளைஞர்களுக்கும் – அறிவுச் சுரங்கமாக மதுரையில் இருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம்… அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

இல்லை, ஆயிரக்கணக்கான மக்களுடைய உடல்நலனையும் – உயிரையும் காப்பாற்றுகின்ற கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை… அதை பயனில்லை என்று சொல்கிறீர்களா? இல்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோடியே 20 இலட்சம் தாய்மார்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் வாங்குகின்ற, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்று சொல்கிறீர்களா?

எதைச் சொல்கிறீர்கள்கள்? பழனிசாமி அவர்களே! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழ்நாட்டு மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்! அது உறுதி! நான் கேட்கிறேன்… தமிழ்மொழி, தமிழ் இனம் தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டு காலம் ஓயாமல் உழைத்த, தலைவர் கலைஞர் பெயரை மக்கள்நலத் திட்டங்களுக்கு வைக்காமல், யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து சென்றீர்களே, உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கலைஞர்’ என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர்! தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம்!

கலைஞர் தான் – எந்நாளும் தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண்! அவருடைய கொள்கைகள், சிந்தனைகளைதான் நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். விடியல் பயணம், புதுமைப்பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – தமிழ்ப்புதல்வன் என்று இந்த திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாமே கலைஞர் பெயரைத்தான் சொல்லுகிறது! கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, கலைஞருடைய தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். எங்கள் தலைவர் பெயரால், தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கும் திட்டங்களை நிறைவேற்றியதில் நான் பெருமிதப்படுகிறேன்.

கலைஞரின் புகழ் வெளிச்சம், இந்தியா முழுக்க பரவி இருக்கிறது! அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்! என்னை பொறுத்தவரையில், என்றும் – எப்போதும் – உங்களுக்கு உறுதுணையாக உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று கூறி விடைபெறுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

ஜெயக்குமார்: முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி புகழ் பாடுகிறார்..! உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுகிறார்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “தமிழக முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் புகழ் பாடுவதையும், உதயநிதி, ஸ்டாலின் புகழ் பாடுவதையும் அன்றாட நிகழ்வுகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் நலம் காப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று சட்டப்பேரவை தேர்தலை அதிமுக சந்திக்கும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த காலங்களை பார்த்துப் புரிந்து கொள்ளலாம்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அறிவுரை: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்..! “திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிக்காதீர்!”

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, “ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் மந்தநிலை தென்பட்டால் மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை பாயும். அதை மனதில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும். விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். திமுக ஆட்சியில் நடந்து வரும் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும்” என கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயபாஸ்கர் அதிரடி: படுத்துக்கொண்டே ஆட்சியை பிடித்த கட்சி நம்ம கட்சி..! 4 வேட்டி, சட்டையை ரெடியா வெச்சிக்கோங்க

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயபாஸ்கர், அதிமுக காரங்க 4 வேட்டி, சட்டையை சலவைக்கு போட்டு ரெடியா வெச்சிக்கோங்க.. படுத்துக்கொண்டே ஆட்சியை பிடித்த கட்சி நம்ம கட்சி.. 2026-ல் நம்ம ஆட்சி தான்.

எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்..!

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள். திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ‌ குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட கட்சி திமுக. திமுகவில் அரசியலிலும் அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானார். திமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்த போதும் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். ஸ்டாலினுடன் மிசா சிறையில் சித்திரவதை அனுபவதித்த மூத்த நிர்வாகிகள் யாரும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளனர்.

திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது. திமுகவில் ஸ்டாலின் அரசராகவும், உதயநிதி இளவரசராகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

அதிமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டரை ஆண்டுகள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திமுக சொன்னது எல்லாம் அறிவிப்பு மட்டும்தான், மக்கள் நலனுக்கான திட்டங்கள் அல்ல. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை இல்லாத இடமே இல்லை. இதை தடுத்து நிறுத்தும் திராணி முதலமைச்சருக்கு இல்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை.

கஞ்சாவை கட்டுப்படுத்த ஓ.1, ஓ.2, ஓ.3 என முன்னாள் டிஜிபி ஓ…. போட்டு கொண்டே சென்று விட்டார். நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் வீட்டு மக்களை மட்டுமே நினைக்கிறார் முதலமைச்சர். அதிமுக மூன்றாக போய்விட்டது நான்காக போய்விட்டது முதலமைச்சர் என்கிறார். நாங்கள் தான் அதிமுக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இதை நிரூபித்து காட்டியுள்ளோம். அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் ஓட்டு குறையும் என்றார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுகவை வீழ்த்த முடியாது. திமுக சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக, சொந்த கட்சியையும் உழைக்கும் நிர்வாகிகளையும் நம்பியே உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை என்கிற நிலைதான் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணி. 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பி, அதிமுக ஆட்சி அமைக்கின்ற தேர்தல். தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகள் தேனீக்களை போலவும், எறுப்புகளை போலவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவை சத்யன்: சீமான் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து மேடைக்கு மேடை உளறுகிறார்..!

நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கோவை சத்யன் அளித்த பேட்டியில், எதை எடுத்தாலும் இதை நான் சொன்னேன்.. நான் சொன்னேன் என்கிறவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என சுற்றுகிறவர்தான். இன்னும் சொல்லப் போனால் சீமானின் தாத்தாதான், லார்டு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கே அறிவுரை சொல்லி இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுத்ததாகவும் அடுத்ததாக சொல்வார்.

7 தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த சீமானின் எள்ளு தாத்தாதான் வேலுநாச்சியாரின் அப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது, வேலுநாச்சியார் என பெயர் வைத்தது என்று கூட சொல்வார். இந்த அளவுக்குக் கட்டுக் கதைகளும் போலி கற்பனைகளையும் வெட்கமே இல்லாமல் இந்த அளவுக்கு அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவரது அரசியல் கட்டமைப்பு. இதுவரைக்கும் மக்கள் நலனுக்காக பேச்சாகவோ செயலாகவோ போராட்டமாகவோ அவர் அறிவித்த வரலாறு எதுவுமே இல்லை. ஊடகங்களில் அடுத்தவரை கேலி பேசுவதும் தரக்குறைவாக பேசுவதும் ஒரு பெரிய வீரர் போல மேடை நாடகத்தில் நடிப்பது போலவும் செய்வதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் சீமான்.

குறிப்பாக இளைஞர்களை தூண்டிவிடக் கூடியவர் சீமான். வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது உரிய குழுக்கள் அமைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த முன்னெடுப்பு. என்னென்ன தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க கூடாது என்பது வரை வரையறை செய்து, அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேளாண் பாதுகாப்பு மண்டலம் கிடையாது. இது எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ஒன்று. இதற்கு கூட சீமான் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். ஆமைக்கறி போன்ற கட்டுக்கதைகளின் தொடர்ச்சிதான் இது. நடிகர் விஜய் கட்சியை தொடங்கி இருப்பதற்கு யார் பயப்படுகிறார்களோ இல்லையோ சீமான் அரண்டு நடுங்கி பயந்து போய் இருக்கிறார். ஏனெனில் அவரிடம் கட்டமைப்பே இல்லை. அவரிடம் இருப்பது எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள்தான். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி வீணாகப் போய்விட்டோம் என்று சொல்லி வெளியே வருகிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான். நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் சீமான் என கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டவர்களை பிரிந்து போனார்கள் என சொல்லாதீர்கள் ..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, பிரிந்து போனவர்கள் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால், அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கப்பட்டவர்கள் அவர்கள். இனி பிரிந்து போனார்கள் என்ன சொல்லை பயன்படுத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வி.கே.சசிகலா: பெரியாரும், அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை..!

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை என வி.கே.சசிகலா தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதலமைச்சராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதலமைச்சராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

2026-க்குள் அதிமுக ஒன்றிணையும் என வி.கே. சசிகலா நம்பிக்கை..!

“ மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே தமிழக முதலமைச்சர் ” என வி.கே.சசிகலா தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதலமைச்சராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதலமைச்சராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.