பாலகிருஷ்ணன்: கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது..!

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மக்களவை தேர்தல் பணியை துவக்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்கடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதைபோல் 300, 400 இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது.

மேலும் சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி ஆறுதல், உதவி செய்யவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாராவது வருவார்களா என்று அதிமுகவினர் கடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது’ என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடலூரில் பல்வேறு கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் பல்வேறு கட்சியின் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதிலிருந்து விலகி அதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். வடலூர் பகுதியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் அதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

வடலூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு ஏற்பாட்டில் சென்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்த 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

விசிலடித்த அதிமுக நிர்வாகிகள்…! உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி..!

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நேற்று இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிய பிறகு மு.க. ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது. சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் புலம்பி மு.க. ஸ்டாலின் வருகிறார். பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார் . பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமி கூறியவுடன் கூட்ட அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். சிலர் விசிலடித்தும் உற்சாக மிகுதியில் நடனமாடினர்.

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேட்டை கையில் எடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த ஜூலை 18-ம் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் அதனை மறுத்து தடை விதித்து விட்டது.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது அவரது கட்டுப்பாட்டில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்தது. அதனால் தனக்கு சாதகமான அதிகாரிகளை பயன்படுத்தி வழக்கை திசை திருப்பி முடித்து வைத்து விட்டார். மேலும் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அவர் தடையாக இருந்துள்ளார். குறிப்பாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு அனுமதி வழங்கிய பின்னர், உயர்நீதிமன்றம் அதனை ஏன் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் என்பது மிகவும் தீவிரமானது.

உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விசாரணை என்பது அரசின் கொள்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி செய்தது கிரிமினல் குற்றம். அதனால் விசாரணை கோருகிறோம். மேலும் இது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமை ஆகும். குறிப்பாக சட்டம் என்பது அதன் போக்கில் இருக்க வேண்டும். அதில் எந்த தலையீடும் இருக்க கூடாது. மாநிலத்தில் அரசு அதிகாரம் மாறினாலும், மறு விசாரணை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.எம்.திரிவேதி,‘‘சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் தாராளமாக விசாரணை செய்யலாம். அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் தாராளமாக விசாரிக்கலாம் சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலாமே. இருப்பினும் இந்த வழக்கில் கடந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எந்த பிரச்னையும் இல்லை என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு விதமாக கூறுகிறீர்கள்’’ என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு வழக்கறிஞர், ‘‘அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையை தவறாக கையாண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின் அது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்த அனுமதி கேட்கிறோம்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘‘இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர் தற்பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவராக உள்ளவர். அவர் தொடர்ந்து வழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை முடிந்துவிட்ட ஒரு வழக்கில் மீண்டும் அனுமதி வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். இதை அரசியல் என்று கூறாமல் என்னவென்று கூறுவது’’ என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அப்படி இருக்க நாங்கள் இதில் ஏன் தலையிட வேண்டும்.

அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் பரிந்துரையுடன் கூடிய உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை தாராளமாக விசாரணை செய்யலாம். அதற்கு எந்தவித நிபந்தனையோ அல்லது மறுப்போ உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்கியது செல்லுமா, செல்லாதா..?- நாளை தீர்ப்பு…!

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இடைக்காலப் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் கடந்த 2017-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் வி.கே. சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தும் வி.கே. சசிகலா சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமியும் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம் வி.கே. சசிகலா தொடர்ந்திருந்த வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்தது. அப்போது வி.கே. சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், கடந்த 2017-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளராக பதவி வகித்த வி.கே. சசிகலாவை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் தன்னிச்சையான முடிவு. மேலும் வி.கே. சசிகலா தற்போது வரை அதிமுகவின் உறுப்பினர்தான் என வாதிட்டிருந்தார்.

பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆகியோர், கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன.

உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுக் கூட்டத்தில்தான் வி.கே. சிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என வாதிட்டனர். இதேபோல ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜரானார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதிகள் நாளை தீர்ப்பளிக்க உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு..!

சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.

முதலில் ஆலோசனை கூட்டம்.. அடுத்து பாதயாத்திரை..! அண்ணாமலைக்கு ஆப்பா..!?

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.

இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார்.  இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான்…

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் முன்பு அறிவித்த நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முறிவு குறித்த அறிவிப்புடன்’நன்றி மீண்டும் வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைதளங்களில் அதிமுக பதிவிட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அதிமுகவிற்குத்தான் நஷ்டம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது.

சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான். பிரிந்து இருந்த அதிமுக தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் பாஜக அமர்த்தியது. எடப்பாடி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார். அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். ஓபிஎஸ் ஒன்று சொல்ல இவர்களும் ஒன்று சொல்ல மாறி மாறி பிரச்சனை உருவானது. அப்போது ஓபிஎஸ்ஸை இபிஎஸ் முன்பாக உட்கார வைத்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தப்பட்டது.

இதற்கெல்லாம் சாட்சியாக கூடவே நான் இருந்தேன். அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ரொம்ப சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டணி முடிந்தது என்றால் அதிமுகவும் இன்றுடன் முடிந்தது. வருகிற 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது…! பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!

ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100-க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் அந்தப் பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பது என்று கூறிய எஸ்.வி.சேகர், அண்ணாமலை கதையும் இப்படித்தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது என்று பேசிய எஸ்.வி.சேகர், அதிமுக -பாஜக கூட்டணி ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார் என மிக ஆணித்தரமாக கூறினார். மேலும் அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும் என்று கூறிய அவர் தனக்கென்று ஒரு மறைமுக அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அண்ணாமலை இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் எல்லாமே சுயநலத்துடன் தன்னுடைய பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருக்கிறார் எனவும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார்.

காவல்துறையினரிடம் போட்டு கொடுக்காமல் பாதுகாத்தவர் எஸ்.பி. வேலுமணிதான்!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி அன்றைய தினம் முதல் தலைமறைவானார். இதை விருதுநகர் காவல் துறையே அறிவித்தது. இந்நிலையில் விருதுநகரில் நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை கூட அவசர அவசரமாக முடித்துக் கொண்டு வெவ்வேறு கார்களில் அவர் மாறி மாறி சென்றுள்ளதாக கூறிய நிலையில் அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில்தான் 21 நாட்கள் கழித்து மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகா மாநிலம் ஹாடன் பகுதியில் தலைமறைவாக இருந்த போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது ராஜேந்திர பாலாஜி தப்ப முயன்ற போது காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிவகாசியில் விருதுநகர் மேற்கு , கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், உங்கள் மத்தியில் நான் ஒரு உண்மையை சொல்கிறேன் கேளுங்கள். எனக்கு திமுக ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது என்னை பாதுகாத்தவர் எஸ்.பி.வேலுமணிதான். 21 நாட்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தொண்டர்களுக்குத் தோழனாக உழைக்கக் கூடிய அண்ணன் எஸ்.பி. வேலுமணி என்னையும் பாதுகாத்தார். தற்போது எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடந்து வருகிறது. இந்த காலம் திமுகவுக்கு இறங்குமுகம், அதிமுகவுக்கு ஏறுமுகம். அண்ணன் வேலுமணிக்கு திமுக எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும்.

வேலை செய்யக் கூடியவர்களை முடக்கிவிடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுகவின் இந்த நடவடிக்கையானது இன்று கேலிக்கூத்தாகி விட்டது. திமுகவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு திமுகவினரும் தமிழக முதல்லமைச்சரும் அலறுகிறார்கள். இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்கான சூழல் உருவாகிவிட்டது.

பிறரை கெடுக்க நினைத்தவர்கள் இன்று கெட்டுப் போய் உள்ளனர். வருங்காலம் அதிமுகவின் காலம்தான் என ராஜேந்திர பாலாஜி பேசினார். குற்றவாளியை விட குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்தான் முதல் குற்றவாளி என சட்டம் சொல்கிறது. அப்படிப்பட்ட நிலையில் காவல்துறையினரிடம் சிக்காமல் தன்னை பாதுகாத்தவர் எஸ்.பி.வேலுமணிதான் என ராஜேந்திர பாலாஜி நெகிழ்ச்சியாக சொல்வதாக நினைத்து அவரின் சட்டவிரோத செயலை போட்டுக் கொடுத்துள்ளார் என்பதாகவே பார்க்கப்படுகிறது.