அண்ணாமலை: திமுக ஆட்சியில் இல்லாதபோது அங்கும், இங்கும், ஓடியதை ஸ்டாலின் மறந்துட்டாரு ..!

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ஐயா திரு ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.வி.சேகர்: கஸ்தூரி மீது ஆந்திராவிலும் வழக்கு போட்டாச்சு..! இனிமேல் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்..!

தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம், தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது, ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள், கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார்.

சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள்.

ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது.

பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

அண்ணாமலை பேச்சு: 2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு..!

2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைய பாரதம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை லண்டனில் பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 40 சதவீத வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்தார். அதே போல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி 40% வாக்குகள் பெற்று ஆட்சியை தக்கவைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ 30 முதல் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன.

திராவிட சித்தாந்தங்கள் காலாவதியாகி வருவதை ஒவ்வொரு தேர்தலும் நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. போன தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இனியும் மக்கள் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதே இந்த சரிவுக்கு காரணம். 2026-ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026-ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

செல்லூர் ராஜு: ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது..!

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். பேச்சை முடிக்கும்போது நான் பேசுவதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது, ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக் காட்டிய செல்லூர் ராஜு தலையை ஆட்டி கொண்டு இல்லாமல் உண்ணாவிரதத்திற்கு குறைந்தபட்சம் 200 நபர்கள் ஆவது ஒவ்வொருவரும் அழைத்து வர வேண்டும் என செல்லூர் ராஜு பேசினார்.

அண்ணாமலை: சென்னை விமான சாகச நிகழ்வு..! பொதுமக்களின் பாதுகாப்பிறகு எந்த அக்கறையும் இல்லை..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

சென்னை மெரினாவில் நேற்று இந்திய விமானப் படையின் 92 -ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.

விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர் பாராஷூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம், போர் விமானம் என இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்களில் சாகசங்களை செய்து காண்பித்து மெரினாவில் கூடியவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட வர வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

லண்டனில் இருந்து அண்ணாமலை: புரிஞ்சு போச்சு..! “விடியலுக்கு இதுதான் அர்த்தமா..!?

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விடியல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு விடியல், அவர்களின் குடும்பத்திற்கு விடியல் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamilisai Soundararajan: அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை…! புல் டைம் அரசியல்வாதி..!

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

Tamilisai Soundararajan: அன்னபூர்ணா விவகாரம்..! அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே..!’’

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

கோவை அன்னபூர்ணா உரிமையாளரிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்தமைக்காக கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. பாஜக அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் வலுத்து வருகின்றது.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில், அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அண்ணாமலை: இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டது..!

தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் தொடங்கிய தமிழ்மொழி அகாடமி சார்பில் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆங்கிலப் புத்தகம், சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ்ப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், ‘இந்திய அரசியலமைப்பு’ எனும் புத்தகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, முதல் பிரதியை சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் பெற்றுக் கொண்டார். ‘சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’ எனும் புத்தகத்தை விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, நம் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே, தனது 97 வயதிலும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் எழுத்துப் பணி மூலம் பாடுபட்டு வருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கர் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்களை அனைவரிடத்திலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அவசர நிலைகொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைவரிடத்திலும் தெரிவிக்க வேண்டும். இந்தப் புத்தகங்களை தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பிரதிகள் வாங்கி தமிழக பாஜக அலுவலகங்களில் வைக்கப்படும்.

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவைக் கொண்டு வருவதற்கு அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். அதையும் மீறி அந்தப் பிரிவு கொண்டு வரப்பட்டது. அதுபோல இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐ 106 தடவை பயன்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் இந்தப் புத்தகங்களில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

இப்புத்தகங்களை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டும். இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அரசியல் வேற்றுமையை மறந்து நாட்டுக்காகவும், மக்களுக் காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என அண்ணாமலை பேசினார்.