Narendra Modi: சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக….!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி, நீலகிரி பாஜக வேட்பாளர் முருகன், பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் கே.வசந்த ராஜன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்தத் திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் அத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் நிறைந்திருக்கிறது.

ஆனால், திமுக அரசு இங்கு மிகுந்திருக்கும் மனித சக்தியையும், ஆற்றலையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. கோவை பகுதியில் ஜவுளித் தொழில் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டிய திமுக அரசு, அத்தொழிலை முடக்கும் வகையில், மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. அதனால், வரக்கூடிய இழப்புகளை எல்லாம் மக்கள் மீது திணிக்கிறார்கள்.

நம்முடைய நாடு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை எல்லாம் வரவிடாமல் முடக்கி வருகிறது திமுக அரசு. திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக அரசுதான், தமிழகத்தில், இந்த கோவைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு முனையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனால், மிகப் பெரிய வளர்ச்சியும், மிகப்பெரிய லாபமும் இந்தப் பகுதிக்கு கிடைக்கவுள்ளது. ஆனால், இண்டியா கூட்டணி இதுபற்றி சிந்திக்கவோ, செய்ய நினைக்கவோ மாட்டார்கள்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களை எல்லாம் அவர்கள் எப்படி பார்த்தனர் என்று தெரியுமா? அந்த மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பதை வைத்தே மாநிலங்களின் நலன்கள் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. எந்த மாநிலத்தில் யார் ஆட்சி செய்தாலும், அந்த மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு உதவுகிறது. வளர்ந்த இந்தியாவுக்காக, வளர்ந்த தமிழகம்தான் உதவ முடியும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால்தான், இந்த தேசம் உயரும் என்று பாஜக அரசு நம்புகிறது. அதனால்தான், தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல லட்சம் கோடிகளை வழங்கியிருக்கிறது.

கோவை உட்பட தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களில், மல்டிமாடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகப் பெரிய வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கோவை பகுதிக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் இண்டியா கூட்டணி, பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுகவும் அந்த விளையாட்டை விளையாடுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்த திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

திமுக எப்போதுமே ஒரு வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறது. திமுகவின் கவனம் எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்தது இல்லை. ஆனால், நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். என்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்படும்போது, இந்த கொங்கு மண்டலம், நீலகிரியின் வளர்ச்சிக்காக இன்னும் வேகம்காட்டி வேகமாக செயல்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

திமுக அரசும், இண்டியா கூட்டணியும் எதிர்ப்பு அரசியல், வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையுமே செய்தது இல்லை. கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, தீவிரவாதிகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய வேலைகளை செய்கிறது.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலின் திறப்பை இண்டியா கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமர் கோயில் தொடர்புடைய நிறைய புண்ணிய தலங்கள் இருக்கிறது. அங்கெல்லாம் நானும் சென்று வந்தேன். ஆனால், அப்படிப்பட்ட புண்ணிய தலங்களுக்குச் செல்வதுகூட, இங்கு ஆட்சியில் உள்ள திமுகவுக்கு மிகவும் சிரமமானதாக இருக்கிறது. காரணம், அவர்கள் சனாதன தர்மத்தையே ஒழிக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிறுவுவதற்காக செங்கோலை நிறுவும் ஒரு மிகப் பெரிய பணியை மேற்கொண்டபோது, அதை தமிழகத்தைச் சேர்ந்த திமுகவும் புறக்கணித்தது. சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக. இன்று இந்தியா 5ஜி என்ற உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால், திமுக 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக – காங்கிரஸ் கட்சிகளின் முக்கியமான குறிக்கோள். அதற்குதான் அவர்கள் முன்வருவார்கள். நான் சொல்கிறேன். ஊழலை ஒழிப்போம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். ஆனால், அவர்கள், ஊழல் செய்வோம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்று கூறி வருகின்றனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு நான் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பினோம். காங்கிரஸும், திமுகவும் எப்படி ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்பது குறித்து அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தமிழகத்துக்கு இழைத்த அந்த துரோகம். இண்டியா கூட்டணியினர் இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு பாவப்பட்ட தமிழக மீனவர்கள்தான் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றனர். திமுகவும், காங்கிரசும் செய்த இந்து துரோகத்துக்காக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்கள்தான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

திமுக எப்போதும் அதிகார ஆணவத்தில் மூழ்கிக் கிடக்கும் கட்சி. பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து திமுக தலைவர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கின்றனர். அவர் யார் இந்த அண்ணாமலை என்று கேட்கிறார். அந்தளவுக்கு ஆணவம் அவர்களது கண்களை மறைக்கிறது. இந்த ஆணவத்தை தமிழகம் என்றும் அனுமதிக்காது. திமுகவின் ஆணவம், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, காவல் துறையில் இருந்த வந்த அந்த இளைஞர் களத்தில் வீரம் காட்டி வருகிறார். அவரை தெரியவில்லை என்று கூறுகின்றனர். இதுதான் அவர்களுடைய உண்மையான குணம். குடும்ப அரசியல் செய்து வரும் அவர்களுக்கு ஓர் இளைஞன் சாதாரண குடும்பத்தில் இருந்து முன்னேறி வருவது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

திமுக தலைவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு, இந்தத் தேர்தல் மோடியை இந்தியாவை விட்டு வெளியேறும் தேர்தல் என்று பேசுகிறார்.அவருக்கும் அவரது கட்சிக்கும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நன்றாக காதை திறந்து கேட்டுக் கொள்ளவும். இந்த தேர்தல் ஊழலை இந்தியாவைவிட்டே அகற்றும் தேர்தல். திமுகவின் குடும்ப அரசியலை இந்தியாவை விட்டே வெளியேற்றுகிற தேர்தல். போதைப் பொருட்களை நாட்டில் இருந்து அகற்றுகிற தேர்தல். திமுக பொத்திப் பொத்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற தேசியத்துக்கு எதிரான போக்கை நாட்டை விட்டே வெளியேற்றுகின்ற தேர்தல்.

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, மற்றும் திருப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்துக்கான புதிய பாதையை திறக்கப் போகிறது. இது மோடியின் உத்தரவாதம். என்னுடைய இந்த செய்தியை தமிழக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.