காவல்துறையினரை தாக்கிய போதை ஆசாமிகள்..!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் வெல்கம் பார் அருகில் காவல்துறையினரை தாக்கிய போதை ஆசாமிகள். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகேயுள்ள நேரு சிலை அருகில் அமைத்துள்ள டாஸ்மாக் கடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு 6 பேர் கொண்ட கும்பல் இசக்கி என்பவரைத் தாக்கி உள்ளனர்.

இதனால் காயம் அடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம், வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சென்று நாளை காலை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு கட்டத்தில், காவலர் கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அவரையேத் தாக்க தொடங்கி உள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரையும் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரூ.1 லட்சம் பேசி ரூ.60 ஆயிரம் முடிச்சா.. சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூர் ரோட்டை சேர்ந்த வைரவேல் தனக்கு சொந்தமான 4 இடங்களை விற்பனை செய்துள்ளார். அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக பத்திர எழுத்தாளர் புவனபிரியாவிடம் பத்திரம் எழுத கொடுத்தார். அப்போது, சம்பந்தப்பட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்வதற்காக பொறுப்பு சார்பதிவாளர் முத்துபாண்டி ரூ.1 லட்சம் பணம் கேட்பதாக பத்திர எழுத்தாளர் புவனபிரியா தெரிவிக்க, அதற்கு வைரவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தனை தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி பத்திரத்தை பதிவு செய்தனர். ஆனால் அதனை வைரவேலிடம் வழங்காமல் இழுத்தடித்தனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குபின் ரூ.60 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து வைரவேல், சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்புதுறை அறியுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை சார்பதிவாளர் முத்துபாண்டியிடம் வழங்குவதற்காக பத்திர எழுத்தர் புவனபிரியாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறையினர் புவனபிரியா கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக பொறுப்பு சார்பதிவாளர் முத்துபாண்டி, பத்திர எழுத்தர் புவனபிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் CTR நிர்மல் குமார் புகார்..!

மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 3 மோசடி வழக்குகளை பதிவு செய்த நிலையில் MP., MLA க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத் துறை 2023 ஜூன் 14-ல் கைது செய்து சிறையிலடைத்தது. 471 நாள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த செப்டம்பரில் நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொடர்ந்து அவருக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் மீது அதிமுக IT பிரிவு இணைச் செயலாளர் CTR நிர்மல் குமார், தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தமிழக மின்சார துறையில் 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்கு ரூ.1,182 கோடிமதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின் மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை பின்பற்றாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் டெண்டர் விடப்பட்டதே இந்த இழப்புக்கு காரணம். மேலும், 26,300 ட்ரான்ஸ் பார்மர்களை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில், ஒரே விலைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கும் நிகழ்வும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக, இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனத்துக்கு ரூ.397 கோடி ரூபாய் லாபம் கிடைக்க உதவியுள்ளனர். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என CTR நிர்மல் குமார் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு..! இந்து முன்னணியினர் கைது..!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் SDPI கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் திரையரங்க வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியதால், திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், திரையரங்கம் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வெளிநபர்கள் உள்ளே சென்றால் தடயங்கள் பாதிக்கப்படும் என்று கூறி இந்து முன்னணி அமைப்பினரை திரையரங்கினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்தனர்.

சென்னை சாந்தோம் சர்ச் அருகிலுள்ள டுமீல் குப்பம் அருகே கரை ஒதுங்கிய டால்பினால் பரபரப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாந்தோம் சர்ச் அருகிலுள்ள டுமீல் குப்பம் எதிரே டால்பின் ஒன்று கரை ஒதுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு டால்பின் 2009 -ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அறிவிக்கப்பட்டது. டால்பின்களில் பல இனங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஆற்றுநீரில் அதாவது நன்னீரில் வாழ்கின்றன.அந்தவகையில் இந்தியாவின் கங்கை நதியில் டால்பின்கள் வாழ்கின்றன.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் டுமீல் குப்பம் அருகிலுள்ள பீச்சில், டால்பின் கரை ஒதுங்கியது. டால்பின் கரை ஒதுங்கிய சம்பவம் நைனார்குப்பம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தயார் காவல் நிலையத்தில் புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி என்பவர் நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின் சகோதரி தேவி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘‘மருத்துவரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்னரே எங்களுக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவன் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்திருப்போம். அவன் செய்த செயல் ஏற்புடையது அல்ல.

அதே நேரத்தில் அந்த மருத்துவரின் சிகிச்சை முறையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே. மேலும், வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களையெல்லாம் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மருத்துவ அறிக்கைகள் இல்லாமல் அவருக்கு எப்படி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை சக மருத்துவர்கள், பணியாளர்கள் சுற்றிவளைத்து சிலர் காலால் எட்டியும் உதைத்து தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விக்னேஷின் தாய் பிரேமா கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அந்த புகார் மனுவில், ‘என் மகன் விக்னேஷ் இதய நோயாளி. அவரை மருத்துவர்கள் உட்பட பலர் சுற்றி வளைத்து தாக்கினர். எனவே, மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி: சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ..!

மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதி ஒதுக்கிய நிலையில், தமிழக அரசு வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொண்ட நிலையில் பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்த மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன.

நீர் மேலாண்மை திட்டங்கள், மருத்துவ கல்லூரி உட்பட புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது இந்த மாவட்டத்தில் மட்டும் தொடங்கப்பட்ட திட்டங்கள். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்கிற புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என பழனிசாமி தெரிவித்தார்.

காவல் வாகனத்தில் மது அருந்திய SSI..! வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு..!

காவல்துறை வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை காவலர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடு வருகின்றனர்.

அந்தவகையில், கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த SSI லிங்கேஸ்வரன், காவல்துறை வாகனத்தில் சீருடை அணியாமல் அமர்ந்து, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் SSI லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், SSI லிங்கேஸ்வரன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோடு சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ். வி. சேகர்: நிழல் நிஜமாகிறது..! நிழலில் கைதட்டல் முக்கியம்..! நிஜத்தில் 6 மாசமோ ஒரு வருஷமோ..!

நிழல் நிஜமாகிறது, நிழலில் கைதட்டல் முக்கியம், நிஜத்தில் 6 மாசமோ ஒரு வருஷமோ என எஸ். வி. சேகர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜிமீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்தே புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த விக்னேஷின் தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார்.

இவரது தாய் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயின் சிகிக்சைக்கு பணம் தடையாக இருந்ததால் தாயை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்தவமனையில் சேர்த்துள்ளார். இங்கு விக்னேஷின் தாயாருக்கு 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தாயாரை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உன்னுடைய தாயாருக்கு முதலில் சரியாக வழங்கப்படவில்லை. அதனால், தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த விக்னேஷ் சுமார் 10 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

பின்னர் விக்னேஷ் அறையின் கதவை மூடிவிட்டு, “எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

மருத்துவர் பாலாஜி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தை மேற்கோள் காட்டி எஸ். வி. சேகர் தனது எக்ஸ் பக்கத்தில், நிழல் நிஜமாகிறது. கிண்டி மருத்துவ மனையில். சினிமா ஹிரோவுக்கு போலீஸ் கிடையாது. FIR கிடையாது court கிடையாது. இந்த காட்சிக்கு கைதட்டல் மட்டுமே முக்கியம். நிஜத்தில் சம்மந்தப்பட்டவன் வெளில வர 6 மாசமோ ஒரு வருஷமோ ஆகும் என எஸ். வி. சேகர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முரளி அப்பாஸ் சரவெடி: தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனம்..! தன் வாழ்க்கை கணிக்க முடியாதவர்..!

தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சனம் நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர் தமிழிசை சவுந்தராஜன் என முரளி அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கு, சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.