Formula 4: எஃப்ஐஏ அனுமதி சுணக்கம்..! சென்னை உயர் நீதிமன்றம் சென்று பந்தயம் நடத்தல்..!

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் பந்தய பயிற்சியை பிற்பகல் 2.45 மணி அளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுஒருபுறம் இருக்க சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு, சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது. எஃப்ஐஏ வழங்கும் அனுமதி சான்றிதழை, போட்டி அமைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே பந்தயத்தை நடத்த முடியும்.

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் சுமார் 10 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்ற இந்த கார்களை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். முன்னதாக சாகசகார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு கார்கள் இரு பக்கவாட்டு சக்கரங்கள் மட்டுமே தரையில் இருந்தபடி அதிவேகத்தில் சென்றதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சண்டாளன் என்ற சாதி பெயரை பயன்படுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்து. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டு அவதூறு பாடல் பாடியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SRM கல்லூரியில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் குவிப்பு..! போதை பொருள் புழக்கம் எதிரொலி …!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு படிப்புக்களுடன் SRM பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இலங்கை, மலேசியா, நைஜீரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள SRM பல்கலைக்கழகம் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆகையால் அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு சோதனையில் காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். அதில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Formula 4: நான் ரெடி..! நீ ரெடியா..! 19 வளைவுகளை கொண்டு ஸ்ட்ரீட் சர்க்யூட் ரெடி.. Mygale F4 Gen.. Wolf Thunder GB08..!

தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய ஓட்டுனர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் ஓட்டுனர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாளை பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.

அதேவேளையில் இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2-வது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது. இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது. பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. பார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.

சென்னை டர்போ அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்கேஸ்டர், வெளிநாட்டைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் பங்கேற்கும் கார்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பந்தயத்தையொட்டி தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா்பாலம் என போட்டி நடைபெறவுள்ளசாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பார்வையாளர்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்: விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது..! இங்கே விடியுமா என்று தெரியவில்லை.!

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் முதலமைச்சரின் அமெரிக்க ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை. எனவெ அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லது தான்.

புதிய கல்வி கொள்கை குறித்த கேள்விக்கு, புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை. மேலும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது. இங்கே விடியுமா என்று தெரியவில்லை என பதிலளித்தார்.

38 பவுன் நகையை ஆட்டைய போட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது.!

பரமக்குடியில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் கீதா, கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றலானார். இவர் கணவரும் மதுரை மாவட்டத்தில் மற்றொரு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ்-அபிநயாவுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அது குறித்த குடும்ப வழக்கின் விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது.

தன்னுடைய 95 பவுன் நகைகளை கணவர் ராஜேஷிடமிருந்து வாங்கித் தரும்படி காவல் ஆய்வாளர் கீதாவிடம் அபிநயா தெரிவிக்க, உடனே ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகைகளை ஒப்படைத்துள்ளார். ஆனால், அபிநயா நகையை கேட்கும்போதெல்லாம் ராஜேஷ் இன்னும் நகையைத் தரவில்லை என்றே சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியான ராஜேஷ், அப்போதே நகைகளை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக அபிநயா குடும்பத்தினரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த இரண்டு தரப்பினரும் காவல் ஆய்வாளர் கீதாவிடம் நகைகள் குறித்து கேட்க, அலட்சியமாகவும், அதட்டலாகவும் பதில் அளித்திருக்கிறார்.

கடந்த மே மாதம் திருமங்கலம் உதவிக் காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய, விசாரணை நடத்தி நகைகளை உடனே ஒப்படைக்கும்படி எச்சரிக்கை செய்தும் 95 பவுனில் 20 பவுன் நகையை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய காவல் ஆய்வாளர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்பும் ஒருசில நகைகளை மட்டும் திருப்பி அளித்தவர், 32 பவுன் நகைகளை ஒப்படைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் கீதா மீது உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் மோசடி செய்திருப்பது உறுதியானதால் காவல்துறைத் துணைத் தலைவர் உத்தரவில் திருமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திவாகரன்: “பழனிசாமிக்கு முன் முன்னாள் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க எம்எல்ஏ-க்ள் எதிர்ப்பு தெரிவித்தனர்..!

புதுக்கோட்டையில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்றுதான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், 35 பட்டியலின எம்எல்ஏ-க்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என திவாகரன்தெரிவித்தார்.

நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தர குழு நியமனம்..!

தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் பாலங்கள்சிறப்பு அலகு உருவாக்கப்படும்’என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்வது குறித்தும் 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களின் தேவை குறித்து பரிசீலிக்கவும், அமைச்சரின் அறிவிப்புகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைவழங்க 5 பேர் குழுவை நியமிக்குமாறு அரசுக்கு துறையின் முதன்மை இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.

இதை அரசு ஆய்வு செய்ததன்பேரில், நெடுஞ்சாலை துறையில் சீரமைப்பு, பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்குதல் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க ஆய்வு குழு அமைக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை பொது மேலாளர்ச.பழனிவேல், சென்னை தேசியநெடுஞ்சாலை துணை தலைமை பொறியாளர் டி.சிவக்குமார், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் – பராமரிப்பு தலைமை பொறியாளர் கு.கோ.சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

எம்.எல்.ஏ ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்களை இடமாற்றம் செய்யக்கோரி மருத்துவமனை முற்றுகை

திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்ச மருத்துவ சேவையும் கிடைப்பதில்லை. உள்ளூரைச் சேர்ந்தவர் மருத்துவ அலுவலராக இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. அவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநரிடம் எஸ்.சந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது புகார் செய்து, அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு அறிவிப்பு: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்..!

சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஜூன் 21-ஆம் தேதி சட்டப்பேரவையில் சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய, நலவாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக் கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரியதுடன், மானியம் பெறுவதற்கான தகுதியையும் நிர்ணயித்து அரசுக்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதியுடையவராவார்.

மானியத்தைப் பெற, விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.