Tamilisai Soundararajan: சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார்..!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

Anbumani Ramadoss: பெரியார் சமூகநீதிக்கான அடையாள சின்னம்…! சமூகநீதிக்கான அநீதிகளை திமுக செய்கிறது…!

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக் கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.

பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான்.

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர் கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்எல்ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்ய வேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு..!

பூந்தமல்லி அருகே ‘செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேஷனல் ரெசிடென்சி’ பள்ளி ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதையும் சீல் வைக்கப்பட்டது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் பகுதியில் ‘செயின்ட் ஜான்ஸ்  இன்டர்நேஷனல் ரெசிடென்சி ‘ சர்வதேச உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வந்தது. சென்னை அடுத்த, பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஊராட்சி பழஞ்சூரில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், அரசுக்கு சொந்தமான புஞ்சை அனாதீனம் நிலம் 25 ஏக்கர் உள்ளது. இதில் சர்வே எண்: 371/1ல் 5 ஏக்கர் நிலத்தை, செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை, 1993 முதல் 2013-ஆம் ஆண்டு வரை, 20 ஆண்டு குத்தகைக்கு பெற்றது.

குத்தகையாக பெற்ற நிலத்தில் ‘செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேஷனல் ரெசிடென்சி ‘ பள்ளியை துவக்கியது. பல மாநிலங்களில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இங்குள்ள விடுதிகளில் தங்கி பயின்று வந்தனர். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளி மூடப்பட்டது. மாணவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் என்பதால், இப்பள்ளியில் மீண்டும் பயில தயக்கம் காட்டினர்.

அதேசமயம், குத்தகை தொகை 23 கோடி ரூபாய் நிலுவை இருப்பதும், குத்தகை காலம் முடிந்ததும், மாவட்ட வருவாய் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து விதிமுறைகளை மீறி அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் இடம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை காவல்துறை தனியார் பள்ளி செயல்பட்டு வந்த இடத்திற்கு சென்றனர். தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறைகளையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து அதில் இருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்துவிட்டு வீடியோ பதிவு செய்து பள்ளி வளாகம் முழுவதையும் சீல் வைத்தனர்.

தமிழிசை சௌந்தரராஜன்: திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடக அரசியல் அம்பலமாகிவிட்டது..!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்றார்.

மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திமுக என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பிக்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள்.

புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு பாஜகவில் இணைத்த புது மண தம்பதியினர்..!

திருமணம் முடிந்த கையோடு, புது மண தம்பதியினர் மிஸ்டு கால் மூலம் பாஜகவில் இணைந்தனர். ராமநாதபுரத்தில் இன்று பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சீனியின் உறவினர் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணம் முடிந்த கையோடு, புது மண தம்பதியரான தர்மமுனீஸ்வரன் – ரம்யா ஆகியோர் மிஸ்டு கால் மூலம் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

சீமான்: தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை…! மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை..!

“மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்திப்பில் சீமான் பேசுகையில், “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கூறுகிறது. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இல்லையா? இங்கு மீனவர்கள் என்பது பிரச்சினை அல்ல; தமிழன் என்பதுதான் பிரச்சினை.

மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை. தமிழகத்தில் 39 எம்பி-க்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? கச்சத்தீவை மீட்க வழியில்லை என சீமான் தெரிவித்தார்.

கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைப்பதற்கு கால அவகாசம் அளித்தும் பயனில்லை..! கோயில் தரைமட்டம்..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் காவல்துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் ராகவன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்குச் செல்லும் கிளை வாய்க்கால் கரையின் மீது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கெபி என்று அழைக்கக்கூடிய சிறிய அளவிலான மாதா கோயிலை கிராம மக்கள் கட்டி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கவிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ராகவன் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதா கோயிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ஆக்கிரமிப்பில் இருந்த மாதா கோயிலை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் இதற்கு, அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாதா கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைப்பதற்கு தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை கால அவகாசம் அளித்தனர். ஆனால், மாதா கோயிலை நகர்த்தி வைப்பதற்கான எந்த பணிகளையும் கிராம மக்கள் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து, மாதா கோயிலை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் இன்று வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மாதா கோயில் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, மாதா கோயிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாதா கோயிலை இடிக்க விடாமல் தற்கொலை மிரட்டல் விடுத்தும், மாதா சிலையை இடிக்க விடாமல் கட்டி அணைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இச்சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியிலிருந்து நாகர்கோவில் வடசேரியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காரில் சென்று பேருந்தை நிறுத்தினர். பின் பேருந்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது ஓட்டுநனரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டிபன், நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொல். திருமாவளவன்: எங்களுக்குள் எந்த விரிசலும், நெருடலும் இல்லை…!”

“திமுக – விசிக இடையில் விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதலமைச்சர் எதுவும் கேட்கவில்லை” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதிலளித்தார். அப்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கும் நிலையில் விசிக சார்பில் முதலமைச்சரை சந்தித்து எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம். ரூ.9000 கோடி அளவிலான 19 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சரின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தோம்.

அத்துடன், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ நிமித்தமாக இரண்டு முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.

முதலமைச்சர் எங்களின் கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர் அவர், “திமுகவின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்டோபர் 2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை என தொல். திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: ‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்க’ என நான் பேசியது பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அது 1999-ல் இருந்து நான் பேசி வரும் கருத்து. அது இப்போது சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. அந்தக் கருத்தை நாங்கள் இப்போதும், எப்போதும் பேசுவோம். எப்போது வலுவாகப் பேச வேண்டுமோ அப்போது அதை வலுவாகப் பேசுவோம்.

தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மற்றபடி திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம் தொல். திருமாவளவன் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்: திருமாவளவன் அவதூறு செய்து வருகிறார்..! விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்…!

திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக. இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். மேலும் மது ஒழிப்பு எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும்.

மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்கேஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமக-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.

பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு திமுக எம்.பி-களும் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.