முதலமைச்சர் அருகே உணவு அருந்த தயங்கிய தூய்மை பணியாளர்..! மு.க. ஸ்டாலின் செய்த செயலால் நெகிழ்ச்சி..!

சென்னையில் கொட்டும் மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றிச் சொல்லும் விதமாக அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணவு அருந்தினார். அப்போது முதல்வர் அருகே அமர்வதற்கு தூய்மை பணியாளர் கூச்சப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் 91 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் – சென்னை, பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள், என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் டாக்டர் எட்வின் ராஜ்குமார் அவர்களிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் முதலமைச்சர் வழங்கினார்.

பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த் தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருள்களை முதல்வர் வழங்கினார். பின்னர் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது, முதலமைச்சருக்கு அருகே இருந்த தூய்மை பணியாளர், அவருக்கு அருகே அமர கூச்சப்பட்டு அதிக இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தார். உடனே முதலமைச்சர், தனது இலையையும் நாற்காலியையும் நகர்த்திக் கொண்டு அந்த பெண் தூய்மை பணியாளர் அருகில் உட்கார்ந்தார். இதை கண்ட அவர் நெகிழ்ச்சி அடைய, இடையிடையே முதல்வர், அந்த பெண்ணுக்கு ஏதாவது உணவு வேண்டுமா என கேட்டது அந்த தூய்மை பணியாளர் நெகிழ்ச்சியடைந்தார்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு..!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்டோபர் 14-ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது பேசிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

பட்டாசு வெடித்து காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் கண் பார்வை பறிபோனது..!

பட்டாசு வெடித்ததில், திருச்சி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி அடுத்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு கொரடாவுமான மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்து பாதுகாப்பு பணியிலிருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் பட்டாசு துகள்கள் பட்டு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பின்னர், அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்பிரமணியன் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறை, அதிமுக அமைப்பு செயலாளர் மனோகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜா, ராகவன், முகமது ரபீக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் நடராஜன் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பூர்விகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2-வது நாளாக பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கண்டா வர சொல்லுங்க… MP காணவில்லை..!

மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “கண்டா வர சொல்லுங்க… என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?” என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

உயர்நீதிமன்றம் கேள்வி: மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா..!?

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் மூன்றே நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை கனமழை எதிரொலி சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 14-ஆம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15-ஆம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. அதபோல், சென்னையில் 16-ஆம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மு.க. ஸ்டாலின் எப்போது கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டார்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்,” என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது, “அதிமுக சீரும் சிறப்புமாக உள்ளதால் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது பிரதமரைப் பார்த்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்து ஆளுநர் தனது சுதியை மாற்றிக்கொண்டு தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டுள்ளார். இன்றைக்கு, திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதல் பெண் ஒன்றியச் செயலாளர் தேர்வு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பெண் ஒன்றியச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 458 கிளைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளன. நிகழாண்டு கட்சி மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கிளை மாநாடுகள் முடிந்து, பல்வேறு இடங்களில் ஒன்றிய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அண்மையில் நடைபெற்று முடிந்த திருமயம் ஒன்றிய மாநாட்டில் மாவட்டத்தின் முதல் பெண் ஒன்றியச் செயலாளராக ஜெ.வைகைராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெ.வைகைராணி பேசுகையில், “கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயதிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈடுபாடு உண்டு. ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தில் பணியாற்றியதோடு, கட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தேன். இப்போது திருமயம் ஒன்றிய மாநாட்டில் தேர்தல் மூலம் ஒன்றியச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் மாவட்டத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு இந்த ஒன்றியத்தில் கட்சியை வளர்ப்பதோடு, ஏழை, எளியோரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தப் பாடுபடுவேன்” என ஜெ.வைகைராணி தெரிவித்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை..! மாமூல் கேட்டு வியாபாரியை ரவுடிகள் தாக்குதல்..!

மாமூல் கேட்டு ரவுடிகள் தாக்குதல் நடத்தியதால் வியாபாரி காயமடைந்த நிலையில், வியாபாரிக்கு சிகிச்சை தராமல் அலைக்கழிக்கப்பட்டதால், சுயேச்சை MLA தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். சந்திரன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்த சோடா பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சந்திரன் கூச்சல் போட்டதால் ரவுடிகள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, கை, தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சந்திரனுக்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி இன்று காலை அவர் சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.ஆனால் அங்கிருந்தவர்கள், தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லை என்று சொல்லி அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சந்திரன் மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மாமூல் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சுயேச்சை MLA-வான நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். அப்போது வியாபாரி சந்திரன் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, சந்திரனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

இதையடுத்து, காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குநர், அதிகாரிகள் அங்கு வரவேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரி சந்திரனை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக் கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டப்பேரவையைக் கடந்து, ஆளுநர் மாளிகை முன்பு வந்தனர். அங்கு ஸ்ட்ரெக்சரை நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தப் பகுதியில் கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களை ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் MLA ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி சரியாக செயல்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் நாராயணசாமியிடம் தெரிவிக்க, இங்கு அரசியல் வேண்டாம் என அவர் பதில் தர தொடர்ந்து இருத்தரப்பும் பேசியபடி இருந்தனர். அரசுச் செயலரோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் இருந்தவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது. பின்னர் சுகாதார துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேல் அங்கு வந்து அவர்களுடன் பேசினார்.

இதையடுத்து, காவல்துறை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை கொண்டு வந்தனர். அதில் வியாபாரி சந்திரனை சிகிச்சைக்காக ஏற்றினர். ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால், “வியாபாரி என்றால் அலட்சியமா அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா?” எனக்கூறி, “மருத்துவர் வந்தால்தான் ஆம்புலன்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வியாபாரி சந்திரனை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.