பெண்கள் தான் 2026-ஆம் ஆண்டு இந்த ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். முதலமைச்சரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை என இந்து அறநிலைய அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?
மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.
ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.
மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது. “மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே கல்லில் வீடுகட்டித் தந்த எங்கள் கைகளே கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே” இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.
பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள். முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான். சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.
பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள் என சேகர்பாபு தெரிவித்தார்.