வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனையில் ரூ.31 ஆயிரம் சிக்கியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் வணிகவரித்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், அங்குள்ள கடைகளில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வேடசந்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வரிவிதிப்பு அலுவலக உதவியாளர் ஒருவர் அங்குள்ள கடைகளில் பணம் வசூலிக்கும் போது கையும், களவுமாக சிக்கினார். ஆனால் உடனடியாக அவர் இரு சக்கர வாகனத்தில் தப்பித்தார் அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் அவர் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்துக்குள் சென்றதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது அவரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சட்டை பையில் ரூ.31 ஆயிரத்து 100 இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை இந்த வசூல் வேட்டையில் வேறு யாருக்கேனும் அவருடன் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே. சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 53 வது குருபூஜை சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின.

இந்நிலையில், கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பகுளம் மருதுபாண்டியர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிப்பதற்காக தேர்தல் பிரச்சார அ.தி.மு.க கட்சி கொடி பொருத்தப்பட்டு வாகனத்தில் வி.கே. சசிகலா வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் ஏராளமான தொண்டர்கள் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

கழிவு பஞ்சு மீதான வரியினை இரத்து செய்ததற்காக அனைத்திந்திய நெசவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகள் 1,570 இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழக துணித் தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 விழுக்காடு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை சட்டம் 1987, பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப்படுகிறது.

மேற்படி சட்டத்தின்படி, பருத்திப் பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக இருக்கிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி இரத்து செய்யப்படுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 14 -ஆம் தேதி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.இதற்கு சேலம் – மேச்சேரி அனைத்திந்திய நெசவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் வி.கே. சசிகலா பங்கேற்பு

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த செப்டம்பரில் திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற, டிடிவி தினகரன் – கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழாவில், வி.கே.சசிகலா மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற சசிகலா பின்னர், அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசினார். மேலும் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை சந்தித்துப் பேசினார்.

சிறுபான்மை சமூகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய கையேடு வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுபான்மை சமூகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய கையேட்டினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், துணைத் தலைவர் டி. மஸ்தான், செயலாளர் தமிமுன் அன்சாரி, உறுப்பினர்கள் மௌர்ய குப்தா மற்றும் இருதயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000 நிதியை சக காவலர்கள் வழங்கல்

தமிழக காவல்துறையில் 2009 -ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த P. முத்து முனீஸ்வரி என்பவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த (10/08/2021) ஆம் தேதி சிவகாசி, ஜக்கம்மாள் கோவில் அருகில், எதிரே வந்த லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்து விட்டார்.

முத்து முனீஸ்வரி கணவர் கூலிவேலை செய்துவரும் பார்த்தசாரதி மற்றும் இரு மகன்கள் சக்திவேல் பாண்டியன், சிவசக்தி பாண்டியன் உள்ளனர். பெண் காவலர் முத்து முனீஸ்வரி மறைவிற்குப் பிறகு அவர் குடும்ப நலனுக்காக அவருடன் பணியில் சேர்ந்த 2009 – ஆவது பேட்ஜ் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூபாய் 26,42,000 சேர்த்து கொடுத்தனர்.

அந்த பணத்தை இரு மகன்களுக்கும் முறையே, எல்ஐசியில் ரூபாய் 10,00,000 மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிசான் விகாஸ் பத்திரம் மூலம் ரூபாய் 3,00,000, மொத்தம் 26,00,000 முதலீடு செய்து, பாண்டு பத்திரமாக தயார் செய்து, மீதமுள்ள தொகையான ரூபாய் 42,000 அவர்களது கைச் செலவுக்காகவும், முத்து முனீஸ்வரி குடும்பத்தின் நலனுக்காகவும் சக காவலர்களால் வழங்கப்பட்டது. சக காவலர்களின் ஒற்றுமையையும், பெருந்தன்மையையும், சேவையையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருநங்கைகள் வரைந்த ஓவியம் அமெரிக்க கண்காட்சிக்கு தேர்வு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கல்கி சுப்பிரமணியம் என்ற திருநங்கை கவிதை, ஓவியம் சிறந்த பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். திருநங்கைகளின் திறமைகளை உலகம் அறியவும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலை மற்றும் ஓவிய பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளாக அளித்து வருகிறேன்.

மேலும் சகோதரி என்ற அறக்கட்டளை நிறுவி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சேவை செய்து வரும் இவர் சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான பல விருதுகளை பெற்று உள்ளார். இந்நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓவியக் கண்காட்சியில் உலகம் முழுவதிலும் உள்ள திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 20- ந்தேதி வரை 6 மாதம் நடைபெறுகிறது. இதில் 7 திருநங்கைகள், ஒரு திருநம்பி உட்பட 8 பேரின் ஓவியங்கள் இடம் பெறுகின்றது.

11-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! மாணவன் போக்சோ சட்டத்தில் கைது..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அடுத்த கப்பலங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி அதே பகுதியில் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த பொள்ளாச்சி தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனுடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவன், மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவி வீட்டிற்குச் சென்று உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதில் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அந்த மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது இலந்தைகூடம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பொது கழிவறை ஒன்று கட்டப்பட்டது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் காரணத்தால் அந்த கழிவறை செயல்படாமலேயே இருந்து வருகிறது. இதனால், வீட்டில் கழிவறை வசதி இல்லாத பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை திறந்தவெளி கழிக்க வேண்டி உள்ளது.  இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது கழிவறையின் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இதனால், இயற்கை உபாதையை கழிக்க எங்கு செல்வது என்று தவித்த பெண்கள் கழிவறையை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவரை அனுகி முறையிட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இல்லம் தேடி கல்வி திட்டம் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும்

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை 200 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது.அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும். இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும்.

அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக சேவையாற்ற இதுவரை 86,550 பேர் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.