திமுக மகளிரணியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. அதாவது குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு மைத்தேயி இன கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ உலகின் மனசாட்சியை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குக்கிராமங்களிலும் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் திமுக மகளிரணி வெளியிட்ட அறிக்கையில், “பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. இதனைக் கண்டித்து 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணியினர், மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். கறுப்பு உடைகளை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

திருநங்கைகள் அட்டூழியம்: இளைஞரை ஓடிஓடி சரமாரியாக தாக்கிய திருநங்கைகள்!

ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள், பேருந்து மற்றும் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் பணம் கேட்பதும், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் தரக்குறைவாக பேசுவதும் வாடிக்கையான ஒன்றாகும். இதற்கெல்லாம் மேலான சம்பவம் செங்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது இரவு நேரங்களில் பேருந்து பயணம் செய்வோரை பதைக்க வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையமான செங்கமத்தில் இரவு நேரத்தில் திருநங்கைகள் சிலர் நின்றனர். இந்த வேளையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் திருநங்கைகளிடம் பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர் ஒருவர் போதையில் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். திருநங்கைகள் பார்த்ததும் இளைஞரிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு இளைஞர் பணம் கொடுக்க முடியாது எனக்கூறியதோடு இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளனர். இளைஞர் மாறாக திருநங்கைகளிடம் பணம் கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே அங்கிருந்த திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து பக்கத்தில் கிடந்த உருட்டுக்கட்டையை கையில் எடுத்து இளைஞரை தாக்க முயன்றனர். இதனால் பயந்துபோன இளைஞர் அங்கிருந்து ஓடினார். ஆனால் திருநங்கைகள் விடவில்லை. அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கினார். பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில் திருநங்கைகள் இளைஞரை விரட்டி விரட்டி தாக்கினர்.

இதனை அங்கிருந்து பார்த்த காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறை இளைஞரை மீட்க முயன்றனர். ஆனாலும் திருநங்கைகள், இளைஞரை சரமாரியாக தாக்கியதால் காவல்துறை திருநங்கைகளை தடுத்து இளைஞரை மீட்டனர். அப்போது கோபமடைந்த திரநங்கை ஒருவர் தனது ஆடையை கழற்றி நிர்வாணமாக முயன்றார். இந்த சம்பவம் செங்கம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை காவல்துறை கைது செய்துள்ளனர்.

அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து ஆசி பெற்ற நிருபர்கள்..!

இந்தியா ஃபஸ்ட் கோயம்புத்தூர் நிருபர் நாகஜோதி மற்றும் திருப்பூர் நிருபர் சானு ஆகியோர் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்று இந்தியா ஃபஸ்ட் மாத இதழை வழங்கினர்.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

தர்ப்பணம் கொடுத்த உளவுத்துறை துணை கமிஷனரிடம் திருடர்கள் கைவரிசை…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்படி, சென்னை அடையாறு இந்திரா நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒன்றிய உளவுத்துறை துணை கமிஷனர் ராஜீவ் நாயர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பிறகு விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரையில், கையில் கொண்டு வந்த தனது செல்போன், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் அட்டை, பான் கார்டு, ரூ.1500 அடங்கிய பையை வைத்துவிட்டு, கடலில் இறங்கி துணை கமிஷனர் ராஜீவ் நாயர் தர்ப்பணம் கொடுத்தார். கரைக்கு வந்து பார்த்த போது, அவர் வைத்துவிட்டு சென்ற பை மாயமாகி இருந்தது தெரியவர துணை கமிஷனர் ராஜீவ் நாயர் புகாரின் பேரில் மெரினா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மனநல காப்பகத்தை கண்டு அதிர்ந்து போன சுகாதாரத்துறை அமைச்சர்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அன்னவாசல் அரசு மருத்துவமனைக்குள் திடீரென அதே வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்திற்குள் சென்றார். அங்கு 4 சிறிய அறைகளில் 59 பெண்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் சுகாதாரமற்ற சூழலும், சரியான உணவு வழங்காத நிலையும், அவர்களுக்கு படுக்கைகள் கட்டில் போன்ற வசதிகள் இல்லாமல் தரையில் படுத்து தூங்கும் அவல நிலையும் இருக்கிறது. ஒரு அறையில் ஆடு, மாடுகளை போல 15 பேர் 20 பேர் அடைத்து வகைகப்பட்டு இருந்தனர்.

பெண் காப்பாளர் பூட்டைத் திறந்துவிட உள்ளே சென்றவரைக் காப்பகத்தில் சிகிச்சையில் இருந்த பெண்கள் வணக்கம் சார் என்று அமைச்சரை அன்போடு வரவேற்றதைப் பார்த்து நெகிழ்ந்த அமைச்சர், “நீங்க எல்லாம் எந்த ஊரு…” என்று கேட்க, அவர்களின் சொந்த ஊர்களைச் சொன்னார்கள். “எவ்வளவு நாளா இருக்கீங்க…” என்று விசாரித்தவரிடம், 2 வருடம் 3 வருடம் என்று சொன்னார்கள். பெண்கள் இருந்த அறை லைட்கள் எரியவில்லை. “ஏன் இன்னும் லைட் போடல” என்றார்.

“இவங்க எல்லாரும் தரையில தான் படுக்கணுமா? பெட் இல்லயா? உங்க வீட்டு பெண்களை இப்படி வச்சிருப்பீங்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபோது பெண் காப்பாளருக்கு ஏதும் சொல்ல முடியவில்லை.“எல்லாரும் சாப்டீங்களா… என்ன சாப்பாடு கொடுப்பாங்க” என்று கேட்க, ‘தினமும் ரசமும் சோறும் தருவாங்க” என்றபோது முகம் இருண்டவர், “வேற தொட்டுக்க கூட்டு பொரியல் தரமாட்டாங்களா?” ‘இல்ல ரசம் சோறு தான்’ என்று மீண்டும் சொன்னார்கள்.

“கிச்சன் எங்கே இருக்கு” என்றபோது, பூட்டை திறந்து விட்ட சுத்தம், சுகாதாரம் இல்லாத சமையலறையைப் பார்த்து அமைச்சருக்கு முகம் மாறியது. “யாரு இங்கே டி.டி? காப்பகத்தில் மனித உரிமை மீறல் நடக்குது. இதை டிடியும் கண்டுக்கல டாக்டரும் கண்டுக்கல. தினமும் ரசம் சோறு மட்டும், படுக்கிறது தரையில… உடனே கீழ்பாக்கம் ஃபோன் பண்ணி அந்த அதிகாரிய வந்து பார்க்கச் சொல்லுங்க தொண்டு நிறுவன ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணச் சொல்லுங்க” என்றார். கீழ்பாக்கத்திலிருந்து உடனே வரச் சொல்லுங்க… வந்து எல்லாத்தையும் சரி பண்ணச் சொல்லுங்க. ஒரு வாரத்தில் மறுபடியும் வருவேன்.” என்று பேசி முடித்தார்.

மாதம் ரூ.10 லட்சம் வரை கல்லா கட்டிய பெண் உதவி ஆய்வாளர் அதிரடி கைது..!

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த அஜிதா சரத் தம்பதியினர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தரவும், குண்டாஸ் பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும் விபசார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு அஜிதா தன்னால் ரூ.10 ஆயிரம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்.இதையடுத்து உதவி ஆய்வாளர் ரமா அட்வான்சாக ரூ.3000 கொடுத்தால்தான் வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினரின் ஆலோசனைப்படி நேற்று காலை ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை காவல் உதவி ஆய்வாளர் ரமாவிடம் அஜிதா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர் ரமாவை கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ரமாவின் மொபட்டில் சோதனையிட்டதில் இருக்கைக்கு அடியில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் உதவி ஆய்வாளர் ரமாவை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். கைதான காவல் உதவி ஆய்வாளர் ரமா விபசார தடுப்பு பிரிவில் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வந்தார். திருச்சி மாநகரை பொருத்தவரை 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உதவி ஆய்வாளர் ரமா அவரது வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் என்று கணக்கிட்டாலே 60 மசாஜ் சென்டர்களுக்கு மாதம் ரூ.6 லட்சம். இதில் சில மசாஜ் சென்டர்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மாதம் ரூ.10 லட்சம் வரை உதவி ஆய்வாளர் ரமா பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மொத்த வசூல் பணமும் இவருக்கு மட்டும் சென்றதா? அல்லது உடன் பணியாற்றும் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளுக்கும் சென்றதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கடந்த 4 வருடங்களாக எஸ்ஐ ரமா விபசார தடுப்பு பிரிவில் இருந்து உள்ளதால் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

எடப்பாடி பூ சுற்றுகிறார்.. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவே இல்லை..

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காதில் பூ வைத்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியது, இத்தனை நாளாக பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் பழனிசாமி பூ சுற்றிக் கொண்டு இருந்தார். நானும் ரொம்ப நாளா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்களை யார் பொதுச்செயலாளர் என்று சொன்னது.

நீங்களாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். பொதுக்குழுவில் காசு கொடுத்து உங்கள் ஆட்களை வைத்து நீங்களாகவே சொல்லிட்டு இருக்கீங்க… இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை. தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. எப்போ பார்த்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட காலமாக அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி சொத்து என சொல்லிக்கொண்டு அவரது வீட்டு சொத்து போல இதை கொண்டு போய்ட்டு இருக்காங்க.

வேறு வழியில்ல்லை. எடப்பாடி ஏமாற்றுவதால் ஊடகமும் சேர்ந்து அதிமுக என்றால் பழனிசாமிதான் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்து நடக்கிறதை பார்த்தோம். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் தெளிவாக உள்ளது. 2018 ல் அனுப்பப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பது ஏற்றப்பட்டுள்ளது. அதை அனுப்பியது ஓபிஎஸ்- இபிஎஸ் தான். இது தேர்தல் கமிஷனுக்கு முதலில் போய்விட்டது.

போன பிறகு இவர் ஒரு ரூலை போட்டு அதற்கு பிறகு நாங்கள் திருத்தம் கொண்டு வந்து இருக்கிறோம். அந்த திருத்தத்தில் என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்து இருக்கிறார்கள் என எடப்பாடி ஒரு கடிதத்தை அனுப்புகிறார். தேர்தல் ஆணைய வெப்சைட் எதை சொல்லுதோ அவர்கள்தான் அத்தாரிட்டி… மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் 14 கட்சியை வைத்துள்ளது. 14 கட்சி வெப்சைட்டிலும் போனாலும் சமீபத்திய திருத்தம் தான் இருக்கும்.

ஆனால், 2018 திருத்தம் உள்ளது. ஏன் இப்படி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால், பழனிசாமி பதிவு செய்ததை நாங்கள் எடுத்துக் கொண்டோம். சப்ஜெட் டூ நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று சொல்லியிருக்கிறது. முதலில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவில் இருப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை.

அது ஏற்றியது அப்படியே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆவணங்களை ஏற்கும் போது மட்டும் நீதிமன்ற தீர்ப்பு என்ன வருதோ அதை பொறுத்துதான் நாங்கள் கணக்கில் எடுக்க முடியும். நீங்கள் கொடுத்ததாக ரெக்கார்டில் வைத்துக் கொள்கிறோம் என்றுதான் தேர்தல் ஆணைய செயலாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கிரிமினலாக என்ன செய்து கொண்டார் என்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

நாங்கள்தான் எல்லாம். நாங்கள்தான் பொதுச்செயலாளர் என்று என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஓபிஎஸ் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி பெரும் ரகளை நடந்ததை பார்த்து இருப்பீர்கள். இனிமேல் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் பொடிப்பொடியாக்கி விடுவோம்” என தெரிவித்தார்.