விரைவில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும்…

மதுரையில் 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க மாநாடு நடைபெற்றது. மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிகையில், மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என எம்.ஜி.ஆர். பாடினார். ஒன்றரை கோடி தொண்டர்களை உயிராக நினைத்தவர் ஜெயலலிதா. இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார்.

இந்த இடம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடு. இந்த படைவீடு மாவட்டத்தின் சார்பில் அவருக்கு வைரவேல் கொடுத்தோம். அந்த வேல் எதற்கு கொடுத்தோம். இதன் மூலம் தி.மு.க. ஆட்சியை சம்காரம் பண்ண போகிறவராக அவதாரம் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இந்த மீனாட்சி பட்டினத்துக்கு பல பெருமை உண்டு. 1973-ல் எம்.ஜி.ஆர். திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதம். ஆனால் மகாத்மா காந்தி வரும்போது 6 மணி நேரம் தான் காலதாமதம். 2010-ம் ஆண்டு மதுரையில் ஜெயலலிதா தலைமையில் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை 10 ஆண்டு காலம் வனவாசம் செய்ய வைத்தது.

இன்றைக்கு 2023-ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை நிகழ்த்தி உள்ளார். ஏற்கனவே பொம்மை முதலமைச்சர் தூக்கமில்லை என்றார். இந்த மாநாடு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இனி அவருக்கு தூக்கமே வராது. 2024-ல் நீங்கள் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது தான் தொண்டனுடைய ஒரே லட்சியம். அதைசெய்து காண்பிப்போம். விரைவில் உங்கள் தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியை கொடுப்பீர்கள். அதற்கு இந்த மீனாட்சி பட்டணம் சாட்சி. இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும்….நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர் .இந்தப் போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்

மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்து டிடிவி தினகரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர்.

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது. அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”. “சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”. என்று பதிவிட்டுள்ளார்.

கோயிலில் மண் எடுக்க முயன்ற பாஜகவினர் கைது..!

கடந்த மாதம் 30-ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது என்றும், இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்றும், அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், அகத்தீஸ்வரர் கோயிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண்எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற இருந்தது. ‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்கு தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்,இதில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது பாஜகவினரை கோயிலுக்குசெல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து காவல்துறை தடுத்தனர். இதனால், காவல்துறையினருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசனை குமாரபாளையம் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு வி.மேட்டூரை சேர்ந்த பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரிடம் கேள்வி கேட்டதால்… இரும்பாலை ஊழியரின் வேலையை பறிக்க பாஜவினர் மனு…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ‘ஒருபோதும் நீட் விலக்கிற்கு கையெழுத்திட மாட்டேன்’ என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியிடம் மசோதா உள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வந்து உருக்காலை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த மாவட்ட தலைவர் சண்முகநாதன் கூறுகையில்,‘‘உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் கடந்த 12-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வு தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் அது தொடர்பாக, தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து சட்டவிதிகளை மீறி பேட்டியளித்துள்ளார். இது அரசு ஊழியருக்கான விதி மீறிய செயல். அம்மாசியப்பன் பணியில் சேரும்போது, போலியான இருப்பிட சான்று வழங்கி பணியில் சேர்ந்துள்ளார்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்துள்ள அவர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர். அதனால், அம்மாசியப்பனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என உருக்காலை நிர்வாக இயக்குநருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம். அவரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால், பாஜ சார்பில் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்.

மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஜனகவள்ளி என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் உயிரிழந்தார். இதேபோல், சேப்பாக்கம் மைதானம் எதிரே மழை நீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜ் என்பவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.

இந்த 2 பேரின் உயிரிழப்புக்கும் நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனையும், மேயர் பிரியாவையும் சந்திக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்தனர்.

அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய கண்காணிப்பாளர் கைது

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார். மின்வாரிய ஒப்பந்ததாரரான இவர் தனது செம்புகுட்டி அசோசியேசன் என்ற மின் நிறுவனத்தின் ஏ கிரேட் லைசன்ஸை புதுப்பிப்பதற்காக கிண்டியில் உள்ள மின்வாரிய ஒப்பந்தத்தாரர்களுக்கான லைசென்ஸ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 5 -ம் தேதி விண்ணப்பத்திருந்தார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகுமார் கடந்த 10 -ம் தேதி கிண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தனது லைசன்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டப்போது லைசன்ஸ் தயாராகி விட்டதாகவும், கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார்.

கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று கேட்டதற்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் தன்னால் 10,000 ரூபாய் லஞ்சம் தர இயலாது என கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர், இரண்டு நாட்கள் கழித்து வந்து 3,000 ரூபாய் கொடுத்து விட்டு லைசென்ஸை பெற்றுச் செல்லுங்கள் என கறாராக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை எடுத்துக் கொண்டு நேற்று மாலை கிண்டி அலுவலத்திற்கு சென்ற கிருஷ்ணகுமார், அங்கிருந்த கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரை பாய்ந்து சென்று ஸ்ரகையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயிர்க்கடன்களில் முறைகேடுகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அதனை திரும்ப செலுத்தியும் உரிய ரசீது வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் விவசாயிகள் மேலும் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயிர்க்கடன் விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்ககோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் விருகல்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி லோகசிகாமணி என்பவர் அளித்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று குடிமங்கலம் காவல்துறை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.