நயினார் நாகேந்திரன்: சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்த இப்படியொரு காட்டாட்சியை யாரும் கண்டதில்லை..!

தமிழக வரலாற்றிலேயே சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்த இப்படியொரு காட்டாட்சியை யாரும் கண்டதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், கள்ளச்சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்.

கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது போலி வழக்கு பதிந்து கைதுசெய்த திமுக அரசின் ஏவல்துறையினர், அவரை விடுவிக்கக் கோரி அவரது இரு சகோதரிகளும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது, தரக்குறைவாக பேசியதோடு தாமதமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதால் தினேஷின் இளைய சகோதரி கீர்த்திகாவின் உயிர் பறிபோனது.

மறைந்த கீர்த்திகாவின் இறப்பிற்கான நியாயத்தைப் பெற்றுத் தரும் பொருட்டு தேசிய SC/ST ஆணையம் தானாக விசாரிக்க முன்வந்த நிலையில், அப்போது கூட பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவில்லை திமுக அரசு. தேசிய SC/ST ஆணையத்தின் டெல்லி அலுவலகத்தில் மே 22-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மே 17-ஆம் தேதி ஆட்சியரால் பெறப்பட்ட கடிதம் மிகத்தாமதமாக மே 20-ஆம் தேதி இரவில் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

தேசிய SC/ST ஆணயத்தின் முன் அவர்கள் ஆஜராகிவிட்டால், இவ்வழக்கின் உண்மைகள் வெளி வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கவே காவல்துறை திட்டமிட்ட ஒரு சதியைச் செய்ய முயன்றது என்றே மக்கள் மனதில் சந்தேகம் எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அக்குடும்பத்தினர் ஒரே நாளில் எப்படி டெல்லிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்தபோது, நமது பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்த் அய்யாசாமி தனது சொந்த செலவில் அவர்களை விமானத்தில் அனுப்பி வைத்து, குறிப்பிட்ட தேதியிலேயே அவர்களை தேசிய SC/ST ஆணையத்தின் முன் ஆஜராக வழி வகை செய்துள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஆணையத்தின் முன்பு ஆஜராகி காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறித்து எடுத்துரைத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்கும் என நம்புவோம். மேலும், கள்ளச்சாராயத்தைத் தட்டிக் கேட்டு நியாயத்தைப் பேச வந்த மக்களை அவமானப்படுத்தியதோடு அவர்களின் உயிரே போகும் அளவிற்கு மனிதாபிமானமின்றி செயல்படும் திமுக அரசின் உண்மை முகம் மேலுமொருமுறை வெளிவந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்த இப்படியொரு காட்டாட்சியை யாரும் கண்டதில்லை என நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: சசிகலா முதல் அமித் ஷா வரை… டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத பழனிசாமி

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் , தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2 G-க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று.. டாஸ்மாக்.. தியாகி..தம்பி.. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா.. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு!” என எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

“பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ…? யார் அந்த தம்பி?

டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி? வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன. இதனை வைத்து தற்போது அதிமுகவினர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில் யார் அந்த தம்பி? என்ற போஸ்டர்களை அதிமுகவினர் ஓட்டியிருந்தனர். இந்த போஸ்டர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை “தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க . ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு

வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,

உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை

தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்

தவழ்ந்து சென்றீர்களா?

ஊர்ந்து சென்றீர்களா?

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்

காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக

வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது

தவழ்ந்து சென்றீர்களா?

ஊர்ந்து சென்றீர்களா?

எது ஸ்டாலினின் கை?

அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.

ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் “SIR”களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்! அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்…

நான் கேட்ட கேள்வி என்ன?

யார் அந்த தம்பி ?

உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!

உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!

ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி? என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ… எல்லாம் தம்பி படுத்தும் பாடு”

அன்று, 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்; இன்று…டாஸ்மாக்… தியாகி… தம்பி. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன. இதனை வைத்து தற்போது அதிமுகவினர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில் யார் அந்த தம்பி? என்ற போஸ்டர்களை அதிமுகவினர் ஓட்டியிருந்தனர். இந்த போஸ்டர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று, 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்; இன்று…டாஸ்மாக்… தியாகி… தம்பி. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு” என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை..!

தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.

தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவகிரியில் வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்

ஈரோடு சிவகிரியில் தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கேள்வி: “டம்மி அப்பா” அரசு நடவடிக்கை எடுக்குமா?

20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த “டம்மி அப்பா” அரசு நடவடிக்கை எடுக்குமா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது. மேலும், தன்னைப் போன்றே “20 வயதுள்ள 20 பெண்கள்” தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

“பொள்ளாச்சி பொள்ளாச்சி” என்று மேடைதோறும் கூவிய திரு. மு.க . ஸ்டாலின் அவர்களே- “உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி” தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!

பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக “உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை” அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஸ்ஸின் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.

தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த “டம்மி அப்பா” அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்! என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தினர்… குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றனர்..!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது. நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும்.

“அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு. அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும்.

அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி என்று சொல்வது தான் பெரிய பித்தலாட்டம்

தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக ஸ்டாலின் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய பித்தலாட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் மு.க. ஸ்டாலின்.

இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?

தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது. அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.

திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய ஏய்ப்பு (Humbug!) ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.

மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்! இத்தனை நாட்கள் “என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?” என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்?

மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை! என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: கோயில் கருவறை நாம் உருவாக்கியது..! தாயின் கருவறை நம்மை உருவாக்கியது..!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், நாம் தமிழர் கட்சிநமக்கு உயிர் கொடுக்கும் தாய்மையை கொண்டாடும் விதமான அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அன்னையர் தின மே 11-ந் தேதி இன்று கொண்டாடப்படுகிறது.

சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’ என்கிறார் நபிகள் நாயகம்!

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!

ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!

எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!

ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!

மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!

இந்த உலகில் நீ எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் உன்னைக் கண்டு பொறாமைப்படாத ஒரேயொரு உயிர் உண்டென்றால், அது உன்னைப் பெற்ற தாய்தான்!

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!

கண்கள் இல்லாமல் பார்த்தேன்!

காற்று இல்லாமல் சுவாசித்தேன்!

கவலையில்லாமல் வாழ்ந்தேன்!

என் தாயின் கருவறையில்!

கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!

அதனால்தான் உலகப் பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து, துறவியான பட்டினத்தடிகளார் கூட, தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல்,

‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்று உருகுகிறார்.

அன்னையைப் போலொரு தெய்வமில்லை;

அவர் அடிதொழ மறப்பவர் மண்ணில் மனிதரில்லை!

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது?

தாய்மையைப் போற்றுவோம்!

தாய்மையை வணங்குவோம்!

நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்! என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.