ராகுல் காந்தி: நாள் முழுவதும் உழைத்தாலும் கடைசியா ஒண்ணுமே இல்லைங்க ..!

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற ராகுல் காந்தி முடி திருத்துபவருடன் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சலூன் கடைக்காரர் அஜித், நாள் முழுவதும் உழைத்தாலும் நாளின் முடிவில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை என்று ராகுல் காந்தியிடம் வருத்தத்துடன் கூறினார். இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அஜித் கூறிய எதுவும் மிச்சமில்லை என்ற வார்த்தைகளும் அவரது கண்ணீரும் தான் இன்றிய இந்தியாவின் கடினமாக உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வரை குயவர்கள் முதல் தச்சர்கள் வரை தொழிலாளர்களின் சொந்த கடை, சொந்த வீடு என்ற கனவையும், அவர்களது சுய மரியாதையையும் குறையும் வருவாய், அதிகரிக்கும் பணவீக்கம் கொள்ளையடித்து விட்டதாக ராகுல் சாடியுள்ளார்.

எனவே தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சமூகத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், கடின உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் அறிவிப்பு: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல் முடித்துவிட்டோம்..!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2-வது வீடியோவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா..!?

திமுக பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் துரை­மு­ரு­கன் தலைமையில், திமுக துணைப் பொதுச் செய­லா­ளர், வனத்­துறை அமைச்­சர் க.பொன்­முடி எழு­தி­ய திராவிட இயக்­க­மும் கருப்­பர் இயக்­க­மும் நூல் வெளி­யீட்டு விழா சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலைஞர் அரங்­கில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு இளை­ஞர் அணிச் செய­லா­ளர் துணை முதலமைச்சர் உத­ய­நிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் பொன்முடி சிறப்­புரையாற்றினார். மேலும், பொன்முடி எழுதிய நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட, திரா­வி­டர் கழ­க தலை­வர் கி.வீர­மணி பெற்­று கொண்டார்.

இத்தனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த நூலில், அன்னைத் தமிழ்நாட்டையும் – அமெரிக்கப் பெருநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார் பொன்முடி. அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடி மக்களின் விடியலுக்கும் – விடுதலைக்கும் – மேன்மைக்கும் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம். இந்தியத் துணைக் கண்டத்தில் நம் மக்கள் எப்படி, பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதேபோன்று அமெரிக்க மண்ணில், கருப்பின மக்கள் நிறத்தால் ஒடுக்கப்பட்டார்கள்.

திராவிட இயக்க வரலாற்றை 1916 முதல் 1949 வரையிலும், கருப்பர் இயக்க வரலாற்றை 1909 முதல் 1941 வரையிலும் எடுத்துக்கொண்டு, இந்த ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். திமுகவை பொருத்தவரை, சாதியின் பேரால் – சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் – காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதி கொடுத்தால் பேசமாட்டார்.

இந்தி மாத விழா நடத்த கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க. ஏன், திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் – நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம். ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை – ஒடுக்குமுறையை – பழமைவாத மனோபாவத்தை – 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது.

ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும். இப்படிப்பட்ட புத்தகங்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் காக்கும் கேடயங்கள். இதை உருவாக்கிக் கொடுத்த நம்முடைய பொன்முடியை பாராட்டுகிறேன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

மசாஜ் சென்டர் ஊழியரிடம் 65 ஆயிரம் கட்டிங் போட்டுட்டு..! அப்பிடி இப்பிடி நடந்து கொண்ட காவலர்..!

சென்னையில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் இளம் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த காவலர் ஒருவர் அவரிடம் சுமார் 65 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டதோடு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைதாகி இருக்கும் சம்பவம் தமிழக மகளிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பல மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. அதில் பல முறையான அனுமதி பெற்ற மசாஜ் சென்டர்களும் இயங்கி வருகிறது. இந்நிலையில், மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து சென்னை காவல்துறை அதிரடி சோதனை நடத்தியதில் பாலியல் தொழில் ஈடுபட்ட சில பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண்ணை விபச்சார வழக்கில் கைது செய்வேன் என பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தென் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளது.

தென் சென்னையை சேர்ந்த பிரியா என்ற இளம் பெண் அப்பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பி இருக்கிறார். அப்போது பிரியாவின் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய காக்கி நிற பேன்ட் அணிந்த ஒருவர் தான் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை என கூறி இருக்கிறார். மேலும் நீ ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்வது எனக்கு தெரியும். உன்னை பற்றிய அனைத்து டீடெய்ல்களும் என்னிடம் இருக்கிறது. தற்போது உன்னை கைது செய்ய வந்திருக்கிறேன் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா தான் என்ன செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறார். தொடர்ந்து காக்கி பேன்ட் அணிந்திருந்த அந்த நபர் உன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதனை கேட்டு பயந்து போன பிரியா வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்து இருக்கிறார். மேலும் மீதமுள்ள பணத்தை ATM மில் எடுத்து வருவதற்காக தனது கணவரை அனுப்பி உள்ளார்.

இதை அடுத்து பிரியாவின் கணவர் வீட்டில் இருந்து சென்ற நிலையில், காக்கி நிற பேண்ட் அணிந்த காவலர் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்தை எடுத்து வந்த அந்த பெண்ணின் கணவர் 15,000 ரூபாயை அந்த காவலரிடம் கொடுக்க அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில் கணவர் வெளியே சென்றதும் தனக்கு நடந்த கொடுமை குறித்து அழுது புலம்பி இருக்கிறார். இதை அடுத்து அந்த பெண்ணை அழைத்துக் கணவன் விருகம்பாக்கம் அனைத்து நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த காவலரின் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காக்கி பேண்ட் அணிந்து வந்தது ஏற்கனவே மோசடி புகார் ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சென்னையில் ஆயுத படையில் காவலராக பணியாற்றும் பாபு ஷா என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பாபு ஷாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி சூளுரை: “2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி..!”

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “அதிமுக வலுவான கூட்டணி இல்லாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றது. இதனால், அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது குறித்து முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு தான் ஒப்பிட வேண்டும். ஆனால் நாமக்கல்லில் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாகவும் பேசுகிறார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது. 2019-ஆம் ஆண்டை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டை விட, 2024 நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி செய்கிறார். திமுக செய்த சாதனைகளை நம்பி தேர்தலில் நிற்பதில்லை. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிவிட்டு, ‘கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும் ஆனால் பிளவு இருக்காது’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்று தான் அர்த்தம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தை மட்டுமே வென்ற அதிமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிட்டால் திமுக குறைவான இடத்தில் தான் வென்றுள்ளது. ஊழல் செய்வதில் தான் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் ஜோசியராக மாறிவிட்டேனா எனக் கேட்கிறார். நான் கூறிய ஜோதிடம் பலிக்கும், திமுக தோற்கும்.

2026 தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியமைக்கும். திமுக கம்பெனிக்கு ஸ்டாலின் தான் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குநர்கள். அதனால் தான் ஸ்டாலின் முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதலமைச்சராகவும், கனிமொழி எம்பி-யாகவும் இருக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார். எனக்கு ஆளுமை இருந்ததால் தான் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சியை மேற்கொண்டும் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொண்டு வந்த எந்தவொரு திட்டத்தாலும் தமிழ்நாடு முதலிடம் பெறவில்லை.

அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றோம். திறன் மிக்க அரசாக அதிமுக அரசு விளங்கிய நிலையில், அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். நாம் பெற்ற தேசிய விருதுகளே அதிமுகவின் சிறப்பான ஆட்சிக்கு சான்று. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.

அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழக அமைச்சர் என்பதை உணராமல், சேலத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறார்.

இத்தனை நாட்கள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்திவிட்டார்கள். ஆனால், திட்டங்கள் தான் வரவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாயுக்கசிவு..! மாணவிகள் 39 பேர் மயங்கியதால் பெற்றோர் பரபரப்பு..!

திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். சென்னை, திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். இத்தனை தொடர்ந்து ஆசிரியர்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர். எனினும் 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல ஒரே நேரத்தில் பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் சமாதானம் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சி.வி.சண்முகம் கேள்வி: இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா..!?

இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என  சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினர்.  விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் அவ முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று காலையில் விருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்திய மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும் அதுகுறித்து, அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி என்பதால் நியூஸ் ஜெ சேனலும் மறுப்புச் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என்று அவர் கேள்வி எழுப்பினர். பின்னர், விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “காவல் கண்காணிப்பாளரை நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா காவல்துறை அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

“திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீடு..!

வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

டிடிவி தினகரன் கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் தனது எகஸ் பக்கத்தில், துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன் கேள்வி: உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வாரா..!?

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? அல்லது உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா..!?” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘ திருநாடும் ‘ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் , தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?

இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்கி விடாதீர்கள்” என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சினையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளன.