எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டவர்களை பிரிந்து போனார்கள் என சொல்லாதீர்கள் ..!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 167 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.67 கோடி நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, பிரிந்து போனவர்கள் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால், அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கப்பட்டவர்கள் அவர்கள். இனி பிரிந்து போனார்கள் என்ன சொல்லை பயன்படுத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்: விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா..!?

1993-இல் தமிழ் வெளிவந்த அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அஜித்குமார் அறிமுகமாகிய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து ‘அஜித் குமார் ரேசிங்’-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். அப்போது, “துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்று விடுவோம் என மீண்டும் மிரட்டல்..!

நடிகர் சல்மான்கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.

மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறார்கள்.

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை..!

இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் உதகமண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .

இந்த மனுவுக்கு தீர்வு சொல்லாமல் பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை நாராயணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. முடிவில் அப்போது அங்கு வட்டாட்சியராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், பணம் கொடுத்தால் தான் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பாத நாராயணன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த 01-11-2010-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வட்டாட்சியர் கனகத்துக்கும் ரூ.500 பணத்தை சாஸ்திரி ஆகியோருக்கும் நாராயணன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, வட்டாட்சியர் கனகம் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு விஜய பிரபாகரன் ஆதரவு..!

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலளித்தார்.

அப்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், நீண்டநாள் போராட்டத்துக்கு பின் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம்.

அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

அதிபர் விளாதிமிர் பூட்டின் அதிரடி உத்தரவு: அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யா..!

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணு ஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி ரஷ்யா அதிபர் விளாதிமிர் பூட்டின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருந்த மோதல் என்பது தற்போது போராக மாறி உள்ளது.

ரஷ்யா, உக்ரைன் எல்லை பிரச்சனைக்கு நடுவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கிய போர் 3-வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து தற்போது ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா படைகளை உக்ரைன் சமாளித்து வருகிறது. போரை கைவிட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என ரஷ்யாவுக்கு நம் நாடு உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன.

ஆனால் அதிபர் போரை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருவது விளாதிமிர் பூட்டினுக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையே தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் மூலம் ரஷ்யாவுக்குள் அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருதுகிறது. தொடக்கம் முதலே அமெரிக்கா உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை செய்து வருகிறார். அதோடு அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

இதற்கு ரஷ்யா தரப்பில் அவ்வப்போது அணு ஆயுதத்தை மையப்படுத்தி விடுவிக்கப்பட்ட மிரட்டலும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா போர் என்பது தற்போது உச்சக்கட்டத்தை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..!

தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாள் விழா மற்றும் 62-வது குருபூஜை இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு இன்று காலை 8.10 மணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து கோரிபாளையம் சிலைக்கு வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி, சீமான், ஜி.கே.மணி, ஒ.பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் அணிவித்து மரியாதை செய்கின்றனர். ஆகையால், மதுரை மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” என்ற பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கும் தலைவர் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி, தற்போது வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து மக்களின் உணர்வுகளோடு தமிழக அரசு விளையாடக்கூடாது. நரகாசுரனை அழித்ததையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதுபோல திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம். அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வர் வாழ்த்து சொல்ல வேண்டியது அவரது கடமை. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

செல்பி எடுக்க சென்றபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி..! 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி மீட்பு..!

செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக‌ மீட்டகப்பட்டார். கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் குப்பி அருகிலுள்ள ஸ்ரவர்ணபுராவை சேர்ந்த சோமநாத் கவுடா மகள் அம்சா எஸ் கவுடா. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தும்கூருவை அடுத்துள்ள மைடாலா ஏரிக்கு நண்பர்களுடன் அவர் சுற்றுலா சென்றார். அங்கு பாறை மீது ஏறி செல்பி எடுத்தபோது கால் தவறி பாறையின் இடுக்கில் விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாறைகளை உடைத்து, கயிறு மற்றும் சங்கிலி மூலமாக மீட்க முயன்றனர். ஆனால் அவர் பாறைகளுக்கு இடையில் 30 அடிக்கும் கீழேசிக்கி இருந்த‌தால், உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் குறைந்த ஒளி மற்றும் குறைந்த அளவிலான தொழில்நுட்பத்தைக் கொண்டு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிராம மக்கள் மணல் மூட்டைகளை போட்டு அடைத்து, தண்ணீரை மடை மாற்றிவிட்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் பாறைகளை குடைந்து உள்ளே இறங்கினர். மீட்பு குழுவினர் 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.