திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, நாட்டிற்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர்தான், பொது சிவில் சட்டம்! மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல – ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இருக்கிறது. ”ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப் போகிறோம்”என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி – பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜி.எஸ்.டி போட்டதுதான் பா.ஜ.க. ஆட்சி! அந்த வரியை நீக்க நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள்தான் குரல் கொடுத்தார்கள்! போராடினார்கள்!
அதுமட்டுமல்ல, இன்றைக்கும் விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்களே! அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அறிவித்திருக்கிறார்களா? இல்லையே! விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று கூறினார்கள்! அதை முதலில் செய்தார்களா? இல்லை! பா.ஜ.க.விடம் பத்தாண்டுகள் சாதனை என்ற சொல்லவும் எதுவும் இல்லை! அடுத்து செய்யப்போகிறோம் என்று சொல்ல சரியான வாக்குறுதியும் இல்லை!
இந்த இந்தியத் துணைக் கண்டத்தில், மரியாதைக்குரிய நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, E.D. – I.T. – C.B.I. வைத்து மிரட்டிக் கட்சியை உடைக்கிறது, எம்.எல்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதலமைச்சர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது., பி.எம். கேர்ஸ் என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதிவாங்குவது என்று, வசூல் செய்த ஒரே ’வசூல்ராஜா’ மோடி ஒருவர்தான்! என மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.