இன்றைய நவீன உலகில் மனிதன் பணத்தை தேடி பணத்தின் பின்னால் ஓட அவனின் பேராசையானது பணத்திற்காக ஆண், பெண் என்று பேதமின்றி கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” தொடர்ந்துக் கொண்டே உள்ளது.
ஆனாலும் “அத்தி பூத்தாற் போல” சாலையில் கிடந்த நகையை தூய்மை பணியாளர் ஒருவர் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தார் என்ற செய்திகள் வருவது இன்னும் நல்லோர் உலகில் இருக்கின்றார்கள் என்று ஒவொருவரும் ஆழ் மனதை தேத்திக் கொள்வதுண்டு. அதன் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் மாணவனின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பிடாரம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தமிழரசன். ஆலவயலிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சாலையில் தங்க நகை கிடப்பதைப் பார்த்துள்ளார். கீழே கிடந்த நகையை எடுத்த தமிழரசன், உடனடியாக அதனை தனது பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார்.
மாணவனின் நேர்மையைப் பாராட்டிய ஆசிரியர்கள், அந்த நகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக அவரை பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண்டெடுத்த நகையை பத்திரமாக ஒப்படைத்தார். நகையைப் பெற்றுக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் வீரமுத்து, மாணவனின் இந்த உன்னதமான செயலை மனதாரப் பாராட்டி சால்வை அணிவித்தார். மேலும் நல்ல மாணவனை உருவாக்கியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.