திருமுல்லைவாயிலில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணிடம் மாதம்தோறும் ரூ. 50 ஆயிரம் கேட்டு, ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ஜெனிபர் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 20-ந் தேதி இந்த அழகு நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், உரிய அனுமதியின்றி தொழில் நடத்தப்படுவதாகவும் கூறி திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திடீரென கடையை மூடிவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து பேசுங்கள் என்று காவல்துறையினர் கூறிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாள் காவல் நிலையத்திற்கு ஜெனிபர் சென்றபோது, ஸ்பா மற்றும் அழகு நிலையத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடத்த வேண்டுமெனில் மாதம்தோறும் ரூ. 50,000 மாமூல் வழங்க வேண்டும் என்று சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல் மற்றும் உதவி ஆய்வாள பாக்கியலட்சுமி ஆகியோர் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர் ஜெனிபர், உதவி ஆய்வாளர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி, மாதம் ரூ. 20,000 வழங்க சம்மதிப்பதாக காவல்துறையினரிடம் ஜெனிபர் தெரிவித்தார்.
பின்னர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 20,000 ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர் ஜெனிபர் சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல் மற்றும் உதவி ஆய்வாள பாக்கியலட்சுமி ஆகியோரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை, கையும் களவுமாக பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.