சென்னை போயஸ் கார்டனிலுள்ள நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சிச் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை ரஜினிகாந்திடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

அப்போது, மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம். இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியகராஜன் அவர்கள் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் D.S. பாண்டியராஜ் அவர்கள் உடன் கலந்து கொண்டனர் என நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.