காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.
அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. பல கிராமங்களில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை அனுமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.