ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எதை வலியுறுத்தி பேச இருக்கின்றனர்? என்ற கேள்விக்கு “ஏற்கனவே நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து குளிர்கால கூட்டத்தொடரில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை வலியுறுத்திப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள். அதானி விவகாரம் குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்.
தொடர்ந்து அதானி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.