கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, பிரதமர் மோடி அவர்கள்! எப்போதும் வெளிநாட்டு டூர்-இல் இருக்கிறவர், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்று உள்நாட்டு டூர்-இல் இருக்கிறார். கூட்டங்களில் பேசுகிறாரே! அதில் எங்கேயாவது தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்று எதையாவது பேசுகிறாரா? இல்லை! அவர் பேசுவதெல்லாம், இந்தியா கூட்டணி கட்சிகளை வசைப் பாடுகிறது! அதிலும், ஒரே பல்லவி! குடும்பக் கட்சி! ஊழல் கட்சி! இதற்கெல்லாம் நான் எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டேன்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாருக்கும் நேராகப் பதவி வருவதில்லை. தேர்தலில் நின்று மக்களைச் சந்தித்து மக்களும் அவர்களுடன் செயல்பாடுகளை எடைபோட்டு வாக்களித்தால்தான், பதவிக்கு வர முடியும்! பிரதமர் மோடி அவர்கள், குடும்ப அரசியல் என்று எங்களை மட்டும் அவமதிக்கவில்லை! எங்களைத் தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களையும் அவர் அவமதிக்கிறார்!
அதே போன்று, ஊழலைப் பற்றி பேசுவதற்கு, பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டாமா? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்க உங்களுக்குத்தான் அத்தனை தகுதியும் இருக்கிறது! தேர்தல் பத்திரம் என்று ஒரு நடைமுறையைக் கொண்டுவந்து ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியது யார், நீங்கள்தானே? மற்ற கட்சிகளும் அதில் நிதி வாங்கி இருக்கிறோம் என்றால், நீங்கள் அந்த நடைமுறையைக் கொண்டு வந்ததுதான் காரணம். ஆனால், நீங்கள் எப்படி நிதி வாங்கினீர்கள்?
E.D – I.T – C.B.I என்று உங்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக, ரெய்டு விட்டு மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்றுப் பணம் பறித்தது பா.ஜ.க.! பா.ஜ.க.விற்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மேல் எப்போது ரெய்டு விட்டீர்கள்! உடனே அவர்கள் என்றைக்குப் பணம் கொடுத்தார்கள் என்று எல்லாத் தகவலும் இப்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறதே!
அடுத்து, பி.எம். கேர்ஸ் நிதி! இதில் வசூல் செய்த தொகையைப் பற்றி கேள்வி கேட்டால், அது தனி அறக்கட்டளை என்று சொல்கிறீர்கள்! அப்படி என்றால், அதை ஏன் பிரதமர் பெயரில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றீர்கள்? இதற்கும் பதில் இல்லை!
அடுத்து, உங்கள் ஆட்சிக்கு சி.ஏ.ஜி கொடுத்த சர்ட்டிபிகேட் என்ன? ”Seven Schemes – Seven lakh crore rupees – Mega Scam” – இதைப் பற்றி ஏன் வாயைத் திறக்கமாற்றீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிட மாற்றம் செய்த மர்மம் என்ன?
அடுத்து, ரஃபேல் ஊழல்! காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்திற்கு 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்கள் என்றால், பா.ஜ.க. ஆட்சியில் 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள்! இதனால் பயனடைந்தது யார் என்று, காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இன்றைக்கு வரை பிரதமர் பதில் சொல்லவில்லை! கார்ப்பரேட்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கடன்களைத் தள்ளுபடி செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று, சகோதரர் ராகுல் நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல், தனிநபர் தாக்குதல் செய்தீர்கள்! அதுமட்டுமா!, அவரின் எம்.பி பதவியையே பறித்தீர்கள்!
பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் ஊழல் பற்றிப் பேசலாமா? அதுமட்டுமா!, இப்போத ஊழல்வாதிகளுக்கு கேரண்டி கொடுக்கும் “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷின் வைத்து, ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறீர்களே! இனியும் நீங்கள் ஊழலைப் பற்றி பேசினால், கிராமத்தில் சொல்வார்களே, “யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை”என்று அப்படித்தான் மக்கள் சொல்வார்கள்! பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும், சாதனைகள் என்று தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.