தஞ்சாவூர் மேல வீதியில் பாஜக சார்பில் 1 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.
கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என நிர்மலா சீதாராமன் பேசினார்.