தாய் பத்திரம் தொலைஞ்சு போயிடுச்சா? 6 விஷயங்களை கவனமா பாருங்க… மூலப்பத்திரத்தை மீண்டும் பெற..

சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது. 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரங்கள் என்பதால் அது காணாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு.. எனினும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணம் கட்டி விண்ணப்பித்தால் மறுபடியும் அதிகாரபூர்வமான, ஒரிஜினலுக்கு இணையான, பத்திரம் பெறலாம்.. அதேசமயம், உங்களிடம் உள்ள சொத்துக்களை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நினைத்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக உள்ளதால், அசல் ஆவணங்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை, தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது தெரியுமா? வீட்டு தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள காவல் நிலையத்தில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு, “காணவில்லை” என்று புகார் தர வேண்டும். அப்போது, பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக்கொண்ட ரசீதை கட்டாயம் பெற வேண்டும்.

பிறகு அவர்களும் 2, 3 நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை என்றால் காவல் நிலையத்திலேயே எப்ஐஆர் பதிவு செய்வார்கள்.. இந்த முதல் தகவல் அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும். காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து, வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்களா? என்று காவல்துறையினரும் பார்ப்பார்கள்.. அத்துடன் அதுகுறித்து விசாரிக்கவும் செய்வார்கள்.

அப்படியும், தாய் பத்திரம் கிடைக்காவிட்டால், “கண்டுபிடிக்க முடியவில்லை” (Non Tracable) என்று காவல்துறை சான்றிதழ் தருவார்கள்.. இந்த சான்றிதழுடன், ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். உடனே வழக்கறிஞரும், பத்திரத்தை காணவில்லை என்றும், கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வார். அதாவது, ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 2 பிரபலமான பத்திரிகைகளில் விளம்பரம் செய்வார்.

இந்த விளம்பரம் செய்து 15 நாட்களுக்குள் ஆவணங்கள் வழக்கறிஞருக்கு கிடைக்கும்பட்சத்தில், அதை உங்களிடம் ஒப்படைப்பார். அப்படியும் ஆவணங்கள் கிடைக்காவிட்டால், ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைத்து, ஒரு சான்றிதழை வழக்கறிஞர் தருவார். அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அனுபவிக்கலாம்.

ஆனால், பத்திரம் தொலைந்த இடத்தை வாங்கியவர் மேற்படி, FIR, NOT TRACEBLE சான்றிழ், நாளிதழில் விளம்பரம், நோட்டரி அவிடவிட் போன்றவை இருந்தாலும் பத்திரம் வேறு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா என்பதையும் கள விசாரணை செய்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், காவல் நிலையத்தில் புகார் மனு, எப்ஐஆர், NOT TRACEBLE சான்றிதழ் இப்படி 6 ஆவணங்களும் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் “நகல் பத்திரம்”, தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.