நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்துவந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொல்லியது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தார். அத்தொகுதிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.
எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பாஜக எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.
வாய்ப்பு கிடைக்காத என்னைப் போல் நிறைய பேர் இதே மனநிலையில் உள்ளனர். தற்போது நான் மட்டும் விலகியுள்ளேன். ஒருவாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள்.” என தடா பெரியசாமி தெரிவித்தார்.