சேகர்பாபு விளக்கம்: மன்னிப்பா… மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை..!

மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

முதலமைச்சரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதலமைச்சர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர்.

கன்னியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதலமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை என சேகர்பாபு தெரிவித்தார்.