சீமான்: தமிழக கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…!

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான கபடி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக வேல்ஸ் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உள்பட தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தானிலுள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடைபெற்ற போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என தமிழக வீரர்கள் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பிய போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் வீரர்கள் தமிழக வீரர்களை தாக்கிய ராஜஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டு பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதோடு, தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்லுங்கள் என்றுகூறி அவமதித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. விளையாட்டில் கூட உரிமையைக் கேட்க முடியாதபடி தமிழ்நாட்டு பிள்ளைகள் அடித்து விரட்டப்படுவார்கள் எனில் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? எப்படி வரும் நாட்டுப்பற்று?

இந்திய ஒற்றுமை, தேசப்பக்தி பன்முகத்தன்மை, இறையாண்மை என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள் இப்போது வாய் திறப்பார்களா? தமிழ்நாட்டு கபடி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழ்நாடு அரசு தமது கடும் கண்டனத்தை பதிவு செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.