திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.
இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.
அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.
ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.
அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.
சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்