கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகலில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளும், பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளுக்கு நிறைவடைந்த நிலையில் 2-ம் வாக்கு பதிவு மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆகையால் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்றுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்றன. இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்கு பதிவுகாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கலந்துகொண்டு ஜேஎம்எம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது, ஜேஎம்எம் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜேஎம்எம் அரசின் சர்வஜன் பென்ஷன் திட்டம், மைன்யா சம்மான் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமான திட்டங்களாக உள்ளன. மைன்யா சம்மான் திட்டம் மூலம் 55 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் மேலும் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ரொக்கம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதைப் போலவே சர்வஜன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் புலோ ஜனோ திட்டம் மூலம் 9 லட்சம் சிறுமிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும், அரசு சார்பில் 25 லட்சம் குடும்பத்தாருக்கு அபுவா ஆவாஸ் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படவுள்ளது. மேலும் 20 லட்சம் குடும்பத்தாருக்கு பச்சை நிற ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களைப் பார்த்துத்தான் பாஜக தலைவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர் என கல்பனா சோரன் தெரிவித்தார்.