எடப்பாடி பழனிசாமி: அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா…?

அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கையெழுத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.