உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருப்பத்தூர் வட்டாரத்தில் இருந்து வந்திருந்த மனு ஒன்றில் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதை அகற்றக் கோரி ஒருவர் மனு அளித்திருந்தார். அதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டார். புதரை சுத்தப்படுத்தியதாக சோமதாஸ் பதிலளித்தார். இதையடுத்து அமைச்சர் அந்த மனு அளித்தவரை உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மனுதாரர் புதர் அகற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சிடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்ததுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வுக்கூட்டத்தில் தவறான பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.