திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என அதிமுக முன்னாள் MLA இன்பதுரை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசினார். அப்போது, “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார். தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” என இன்பதுரை தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரையின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.