திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டியை சேர்ந்த பானுமதி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த, தனது மகளுடன் வசித்து வந்தார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பானுமதி காத்திருந்தார். அப்போது அவரது கண் முன்னே நடந்த ஒரு விபத்தில், ஆனைமலையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
மனிதநேயத்துடன் அவரை மீட்ட பானுமதி, மருத்துவமனையில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதேபோல் பிரபாகரனையும் அவரது மனைவி ஏற்கனவே பிரிந்துவிட்டதால், உடுமலைபேட்டையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவர் பானுமதியுடன் கணவன்- மனைவி போல வாழத் தொடங்கினார். அவ்வப்போது பானுமதிக்கு பண உதவியும் செய்து வந்தார்.
இந்நிலையில், பானுமதியின் மகளுக்கு திருமணம் முடிந்ததையடுத்து, பிரபாகரன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார். இதற்கு பானுமதியின் மருமகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு பானுமதியை வற்புறுத்தினார். இதனால் பிரபாகரனுடன் பேசுவதை பானுமதி தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு பானுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் பிரபாகரன் மீது பானுமதி உடுமலைபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பானுமதி மீது அவர் கடும் கோபத்தில் இருந்த பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். பானுமதியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பானுமதி அவரது அழைப்புகளை தவிர்த்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதி வீட்டுக்கு பிரபாகரன் வந்தார். அப்போது பானுமதி தனது உறவினர் மயில்சாமியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிரபாகரன், தன் மீது போட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். அதற்கு பானுமதி மறுக்கவே. இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் வெட்டினார். இதனை தடுக்க முயன்ற உறவினர் மயில்சாமியையும் கல்லால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து மயில்சாமி கீழே விழ, பிரபாகரன் தொடர்ந்து தாக்கியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்த மயில்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தித்தியது.