தொடரும் காவல் மரணங்கள்… “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எம்ஜிஆர்நகர் அருகேயுள்ள நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் வெங்கடேசன். எம்ஜிஆர் நகர் காவல் நிலையப் பகுதியில் போதை வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய ஓட்டுநர் வெங்கடேசன் கடந்த ஜூன் 28- ந் தேதி திடீரென உயிரிழந்தார். காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் தனது மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சபரி வர்மன், நாகர்கோவில் மாவட்ட சிறையில் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலில் 19 காயங்கள் இருந்ததால், இது ஒரு காவல் மரணம் எனக் கூறி உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த நாளே சென்னை சேலையூரைச் சேர்ந்த பாலாஜி 500 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்த காவல் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம். இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்பாகம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த அவர், 18-ந் தேதி அதிகாலையில் திடீரென மயங்கி விழுந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருணாச்சலத்தை சேர்த்தனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் கடந்த ஜூலை 23-ந் தேதி உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்குதலே மரணத்திற்குக் காரணம் எனக் கூறி உறவினர்களும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதில் நாகர்கோவில் சபரிவர்மன், தூத்துக்குடியில் அருணாச்சலம், சென்னை புழல் சிறையில் பாலாஜி அதேபோல் வெங்கடேசன் ஆகியோர் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.