கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11 ஐ சேர்ந்த என்.எல்.சி., ஊழியரின் மகள் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் திருமண தகவல் மையங்கள் மூலம் பெண்ணின் ஜாதகம் மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் கண்ணன் ஹைதராபாத்தில் உள்ள சாக்லேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இணையதளத்தில் பார்த்த பெண்ணின் போட்டோவிற்கு ஏற்றார் போல், தனது போட்டோவை மார்பிங் செய்து 25 வயது வாலிபர் போல் இளமையாக காட்டியதுடன் போலியாக ஜாதகத்தை தயாரித்து பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார்.
இருவரது ஜாதகமும் ஒத்து போனதால், இரு குடும்பத்தினரும் திருமணம் குறித்து பேச துவங்கினர். இதன் தொடர்ச்சியாக, நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க, பெண்ணின் வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாயை, சுரேஷ் கண்ணன் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த பெண், மாப்பிள்ளை நேரில் பார்க்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து, சுரேஷ் கண்ணன், மணப்பெண் வேலை செய்யும் பள்ளிக்கு சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், போட்டோவில் பார்த்த மணமகன் நீங்கள் இல்லையே எனக்கூறியுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட சுரேஷ் கண்ணன் அந்த படத்தில் உள்ளது நான் தான் என கூறி சமாளித்தார். அதனை ஏற்க மறுத்த அந்த பெண், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர், தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், சுரேஷ் கண்ணன் வங்கி கணக்கிற்கு அவர் கொடுத்த ஒரு லட்ச ரூபாயைதிருப்பி செலுத்தி உள்ளனர். ஆனால் சுரேஷ் கண்ணன் அப்பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என கூறி செல்போன் மூலமாக அவரை தொந்தரவு செய்துள்ளார்.
மேலும், அவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நெய்வேலியில் உள்ள நபர்களிடம் தனது மனைவி காணாமல் போய்விட்டார் எனக்கூறி பணம் கொடுத்து அவரை தேட சொல்லி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிந்து ஆள் மாறாட்டம் செய்த மணமகன் சுரேஷ் கண்ணனை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.