தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவர் மதுரையைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி ஒருவரின் சரக்கு லாரியை ஓட்டி வந்தார். கடந்த நவம்பர் 3-ந் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது உசிலம்பட்டி அருகே வலந்தூர் கண்மாய் பகுதியில் லாரியில் திடீரென தீப்பிடித்து ஏலக்காய் மூட்டைகள் எரிந்து நாசமாகின.
இது தொடர்பாக வலந்தூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்து இருந்தார். இதற்கிடையில், லாரியில் இருந்த 162 ஏலக்காய் மூட்டைகளில் சுமார் 2.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 67 மூட்டைகள் மாயமாகி இருப்பதாகவும், லாரியின் ஜி.பி.எஸ் கருவிகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறி சரக்கு நிறுவன மேலாளர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக பாலகிருஷ்ணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முதல் இரண்டு நாட்கள் தனது மனைவி சுதாவுடன் சென்ற அவர், இரவில் வீடு திரும்பினார். ஆனால், மூன்றாவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாலகிருஷ்ணன் மட்டும் தனியாக விசாரணைக்குச் சென்றார். இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், சனிக்கிழமை அதிகாலை சுமார் 6 மணியளவில் காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது கணவரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி, ஏலக்காய் திருட்டை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக மனைவி சுதா குற்றம் சாட்டினார். மேலும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், காவல்துறையினர் அடித்தே கொன்றுவிட்டதாகவும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நீதித்துறை நடுவர் ஆனந்த் ராஜ் முன்னிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பாலகிருஷ்ணனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர். தற்போது வெளியாகியுள்ள அந்தப் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன: பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியில் 5 வெவ்வேறு இடங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக் கட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது கழுத்தின் வலது பக்கத்தில், கயிறு இறுக்கிய தடயத்திற்கு அருகே ஊசியால் குத்தப்பட்டது போன்ற 3 மர்மக் காயங்கள் காணப்படுகின்றன. கழுத்தின் இரு பக்கங்களிலும் சாய்வாக சுமார் 27 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கயிற்றால் இறுக்கப்பட்ட தடம் பதிந்துள்ளது. பிரேத பரிசோதனையில் பாலகிருஷ்ணனின் மூளையில் வீக்கமும், ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, அவரது இதயம் இயல்பான அளவை விடப் பெரிதாக வீங்கியிருந்ததாகவும், இதயத்தின் வலது அறைகளில் ரத்தமும், ரத்தக் கட்டுகளும் உறைந்து காணப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன் மற்றும் கலைச்செல்வி ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, கொலை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.